நாங்க தவறான செயல்களில் ஈடுபட்டது இல்லை.. ஆளுநர் மாளிகை அட்டாக்.. அண்ணாமலைக்கு அமைச்சர் பதிலடி
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் திமுகவை விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்திருக்கிறார்.
சென்னை கிண்டி சர்தார்படேல் சாலையில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று மதியம் சுமார் 2.45 மணியளவில் பெட்ரோல் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது. அதாவது ஆளுநர் மாளிகை முதலாவது நுழைவு வாயில் எதிரே மர்மநபர் ஒருவர் நின்று கொண்டிருந்திருக்கிறார். அவரை விசாரிப்பதற்காக பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னிடமிருந்த இரண்டு பாட்டில்களை ஆளுநர் மாளிகையை நோக்கி வீசியிருக்கிறார் அந்த மர்ம நபர். இந்த பாட்டில்கள், மாளிகையின் அருகே வைக்கப்பட்டிருந்த தடுப்பு பக்கத்தில் விழுந்து லேசாக தீப்பற்றி எரிந்தது. போலீசார் உடனே தீயை அணைத்துள்ளனர்.

இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடித்து கிண்டி காவல் நிலையத்தில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் ஒப்படைத்தனர். கைதானவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் மேலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன்னை சிறையிலிருந்து விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், நீட் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால்தான் குண்டு வீசியதாகவும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இவர் ஏற்கெனவே கடந்த 2022ம் ஆண்டு பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போதும் குண்டு வீச்சில் ஈடுபட்டிருப்பது தொடர்பாக வெடிபொருள் தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். மறுபுறம் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது குறித்து கூறுகையில்,
"ராஜ்பவன் மீது இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது. முக்கியமில்லாத விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுக மும்முரமாக இருக்கும் சமயத்தில், குற்றவாளிகள் தெருக்களில் இறங்கிவிட்டனர். 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய அதே நபர் தான் இன்றும் ராஜ்பவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தொடர் தாக்குதல்கள், இந்தத் தாக்குதல்களுக்கு திமுக அரசுதான் நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. மு.க.ஸ்டாலின் எப்பொழுதும் செய்வது போல் இப்போது அடுத்த திசைதிருப்பலுக்கு தயாராகிக் கொண்டிருப்பார்" என்று விமர்சித்திருந்தார்.

அண்ணாமலையின் இந்த விமர்சனத்திற்கு அமைச்சர் ரகுபதி தற்போது செக் வைத்திருக்கிறார். அதாவது, "ஆர்எஸ்எஸ் பின்னணியில் இயக்குகிற பாஜக இப்படியெல்லாம் சொல்லக்கூடாது. யார், யாருக்கு நிதியுதவி கொடுப்பார்கள் என்று இந்திய மக்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் இதுவரை இப்படியான தவறான செயல்களில் ஈடுபட்டது கிடையாது. அப்படி செய்யும் நபர்களை ஆதரிப்பதும் கிடையாது" என்று கூறியுள்ளார். அமைச்சர் இவ்வாறு கூறியதற்கு பின்னர் சில காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மாலேகான் குண்டுவெடிப்பு எனப்படும் இந்த வழக்கில் பாஜக எம்பியான பிரக்யா சிங் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறார். ஒருவேளை இதை கருத்தில் கொண்டு கூட அமைச்சர் மேற்குறிப்பிட்டவாறு கூறியிருக்காலம் என்று அரசியல் விமரச்கர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications