அறப்போர் இயக்கத்திடம் ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கோரி அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் வக்கீல் நோட்டீஸ்!
சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது மகன்கள் மூலமாக சுமார் 411 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் குற்றம்சாட்டிய நிலையில், ஜெயராமனுக்கு எதிராக அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் திவாகர், 10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னையில் கடந்த 22 ஆம் தேதி பத்திரிக்கையாளர்களை சந்தித்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், சென்னை பரங்கிமலையில் உள்ள அரசு நிலத்தை தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திவாகர் இயக்குநராக உள்ள டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்டு ஹோட்டல்ஸ் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் தெரிவித்தார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூபாய் ரூ. 411 கோடி மதிப்புள்ள உள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளார். ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோ அருகே பிஎஸ்என்எல் அலுவலகம் தாண்டியதும் இடது பக்கம் இருக்கக்கூடிய சுமார் 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார் என்று குற்றம்சாட்டினார் ஜெயராமன்.
இந்த புகார் உண்மையில்லை எனக் கூறி தங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை தெரிவித்தாக கூறி அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திவாகர், தனது வழக்கறிஞர் சரவணக்குமார் மூலம் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நிலத்தை அபகரித்ததாக ஜெயராமன் தவறான செய்தியை வெளியிட்டதாகவும், இதற்கு ஏழு நாட்களுக்குள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் 10 கோடி ரூபாய் இழப்பு வழங்கிட கோரி வழக்கு தொடர் இருப்பதாகவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திவாகர் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அந்த நோட்டீஸில், கடந்த 1991 ஆம் ஆண்டு இந்த நிலம் வாங்கப்பட்டதாகவும் இது தொடர்பாக சில வழக்கில் தொடர்ந்து எங்களுக்கு சாதகமாக உயர்நீதிமன்ற உத்தரவுகள் வந்துள்ளது. ஆனால் இந்த உண்மையை மறைத்து தவறான தகவல் அளித்தது எங்கள் தந்தை மற்றும் எனக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக செய்தி ஊடகங்களில் செய்தியும் வெளியாகியுள்ளது. அவதூறு பரப்பும் வகையில் வெளியிடபட்டுள்ள இந்தக் கருத்துக்கு 7 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். பத்து கோடி ரூபாய் மனநஷ்ட ஈடு வழங்க வேண்டும் இல்லை என்றால் சட்டப்படி சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கபடும் என அந்த வழக்கறிஞர் நோட்டீஸில் தெரிவிக்கபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications