17 மணி நேரம்.. ஓய்வின்றி.. நெஞ்சுவலி வர காரணமே அமலாக்கத்துறை செஞ்ச வேலை தான்: சீறிய அமைச்சர் ரகுபதி!
சென்னை: ஒரு மனிதரை 17 மணி நேரம் விசாரித்தது சட்டத்திற்கு புறம்பானது, செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி வருவதற்கு அடிப்படை காரணமே அமலாக்கத்துறை நடந்துக்கொண்ட விதம் தான் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று முன் தினம் நள்ளிரவில் கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி நேற்று பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 2ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து புழல் சிறைக் கைதியாக உள்ள செந்தில்பாலாஜி மருத்துவமனையில் உள்ளார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை எடுத்துள்ள நடவடிக்கை முழுக்க முழுக்க மனித உரிமை மீறல். ஒரு மனிதரை 17 மணி நேரம் விசாரித்தது சட்டத்திற்கு புறம்பானது. அவருக்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும். அவருக்கு ஓய்வு கொடுக்காமல் துன்புறுத்தியுள்ளனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனநிம்மதியை குலைக்கும் விதமாக செயல்பட்டுள்ளனர். இது முழுக்க முழுக்க மனித உரிமைகளை மீறிய செயல். திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கோடு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும். நெஞ்சுவலி வருவதற்கு அடிப்படை காரணமே அமலாக்கத்துறை நடந்துக்கொண்ட விதம் தான்.
செந்தில் பாலாஜியை வைத்து கொடுமைப்படுத்தினால் மற்ற அனைவரையும் பயப்பட வைக்க நினைக்கிறார்கள். ஆனால் திமுக எதற்கும் பயப்படாது என்று பாஜகவுக்கு தெரியாது. இனிமேல் அமலாக்கத்துறை இதுபோன்று எடுக்கும் நடவடிக்கையை தடுக்க சிபிஐ இனி தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்றுத் தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று இரவுக்கு பிறகு தான் செந்தில் பாலாஜி சிறை துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளார். சிறைத்துறை விதிப்படி ஒரு நாளுக்கு 3 பேர் மட்டும் தான் மனு அளித்து சந்திக்க முடியும். செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம். சட்டப்போராட்டத்தின் மூலமாக நல்ல தீர்ப்பினை பெற முடியும் என்பதில் நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications