காந்தியை கொன்றது யார் என ஆளுநருக்கு தெரியும்தானே? ராஜ்பவன் பதிவுக்கு அமைச்சர் சாமிநாதன் ரிப்ளை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இன்று சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்தாதது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு திமுக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காட்டமாக பதில் கொடுத்துள்ளார்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 78வது நினைவு நாளையொட்டி, இன்று சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதையடுத்து, காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்தாதது பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பினார்.

chennai governor mk stalin

ஆளுநர் போட்ட ட்வீட்

மகாத்மா காந்தி நினைவு நிகழ்வை அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதா? தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்த காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதலமைச்சரிடம் நான் பலமுறை கோரிக்கைகள் விடுத்தேன்.ஆனால், எனது கோரிக்கைகள் பிடிவாதமாக மறுக்கப்பட்டுள்ளன. காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினார் ஆளுநர் ரவி.

அமைச்சர் சாமிநாதன் பதில்

இந்நிலையில், ஆளுநருக்கு தமிழக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில் கொடுத்துள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மெரினா கடற்கரையில் மெட்ரோ கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த 2022 முதல் எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலை முன்புதான் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்புகள் நடைபெற்று வருகின்றன.

எழும்பூர் அருங்காட்சிகத்தின் பிரதான நுழைவு வாயில் முன்பு இருக்கும் மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். ஆளுநர் குறிப்பிட்டது போல அருங்காட்சியகத்தின் மூலையில் நடைபெறவில்லை என்பதை முதலமைச்சர் அஞ்சலி செலுத்தும் புகைப்படத்தை பார்த்தாலே தெரியும். ஆளுநர் கண்களுக்கு வெறும் அவதூறுதான் தெரியும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் கண்ணுக்கு அவதூறுதான் தெரியும்

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாத்மா காந்தியின் நினைவு தினம் நடத்துவது தொடர்பாக ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். "காந்தி மண்டபத்தில் காந்தி நினைவு நிகழ்வை நடத்தாமல் அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?'' என கேள்வி எழுப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

பாரம்பரியமாக, காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்புகள் மெரினா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், மெரினா கடற்கரை சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், 2022-ஆம் ஆண்டு தமிழக அரசு எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திற்குள் மகாத்மா காந்தியின் புதிய சிலையை நிறுவியது.

அன்று முதல் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்புகள் இரண்டும் எழும்பூர் அருங்காட்சியக காந்தி சிலை முன்புதான் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டுகளில் எழும்பூரில் நடந்த இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

பாரம்பரியமிக்க எழும்பூர் அருங்காட்சியகத்தின் வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். பாந்தியன் சாலையை ஒட்டியிருக்கும் அந்த அருங்காட்சிகத்தின் பிரதான நுழைவு வாயில் முன்பு இருக்கும் காந்தி சிலை முன்புதான் அஞ்சலி நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. ஆளுநர் குறிப்பிடுவது போல அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடக்கவில்லை என்பதை முதலமைச்சர் அஞ்சலி செலுத்திய புகைப்படத்தை பார்த்தாலே தெரியும். பின்னணியில் பாந்தியன் சாலையும் மேம்பாலமும் புகைப்படத்தில் தெரியும். ஆனால், ஆளுநர் கண்களுக்கு வெறும் அவதூறுதான் தெரியும்.

காந்தியை கொன்றவர்கள் யார்?

'காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?” எனவும் கேட்டிருக்கிறார் ஆளுநர்.

1947ஆகஸ்ட்15-ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த போது, திராவிட கழக பொதுச் செயலாளராக இருந்த அண்ணா, 'சுதந்திர தினம் இன்பநாள்' என சொல்லி, பிரிட்டிஷுக்கு ஆதரவானவர்கள் என்கிற பழி விழுந்துவிடாமல் பாதுகாத்தார். அந்த அண்ணாவின் வழி வந்த நாங்கள் தேசத்தையும் தேச பிதாவையும் நேசிப்பவர்கள். தேசப்பிதாவை கொன்றவர்களை கொண்டாடுகிறவர்கள் அல்ல நாங்கள்.

காந்தி ஏன் கொல்லப்பட்டார்? அவரை கொன்றது யார்? என்பது எல்லாம் ஆளுநருக்கு தெரியும்தானே! இன்று தேசப்பிதா மறைந்த தினம் மட்டுமல்ல, இந்துத்துவா தீவிரவாதியால் மகாத்மா காந்தி கொல்லப்பட்ட தினமும் என்பது வரலாறு.

மதவெறிக்காக காந்தியை கொன்றவர்கள் இன்று ரத்த பசியோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து ஆளுநர் குறிப்பிடும் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள்தான் களமாடி கொண்டிருக்கிறார்கள். மகாத்மா காந்தியின் கொலைக்குப் பின்னால் இருந்தவர்களையும் அமைப்பையும் ஆதரிப்பவர்களின் நோக்கங்களை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, ''மகாத்மா காந்தியைப் பற்றி உலகினர் யாருக்கும் தெரியாது. காந்தி’ என்ற திரைப்படத்திற்குப் பிறகே தெரிந்தது'' என சொல்லி காந்தியை சிறுமைப்படுத்திய போது ஆர்.என்.ரவி எங்கே போனார்?

2019-ம் ஆண்டு உத்தரபிரதேசம் அலிகாரில் உள்ள இந்து மகா சபை அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு தீ வைத்த பூஜா சகுன் பாண்டேவை ஆளுநர் ரவி கண்டித்திருக்கிறாரா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைவிட ஆளுநர் முக்கியமானவர் அல்ல. மன்னராக, ஜமீன்தாராக நினைத்துக் கொண்டு அதிகாரம் செய்யும் மனநோயில் இருந்து ஆளுநர் விடுபட வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதைத் தவிர்த்து, தமிழக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துமாறு ஆளுநரை கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் - தமிழக அரசு மோதல்

பல்வேறு விவகாரங்களில் ஆளுநருக்கும் - தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர் ரவி. குடியரசு தினத்தன்று ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தது தமிழக அரசு. இந்நிலையில், காந்தி நினைவு நாளை முன்வைத்து மீண்டும் கருத்து மோதல் வெடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+