அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்ததற்கு ஹைகோர்ட் தடை!சேகர் பாபு பதில் இதுதான்
சென்னை: அயோத்தியா மண்டபம் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்வதாகவும் முதலமைச்சருடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.
அயோத்தியா மண்டபம் வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நேற்று உயர்நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் சேகர்பாபு
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற 550 கோயில்களுக்கு 1500 விற்பனை முனையங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கோயில்களில் முன் பதிவு செய்யும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக திருக்கோயில்களுக்கு கையடக்க கணினி ஒன்று வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

முதல்வருடன் ஆலோசனை
மேலும், தற்போது கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் செய்யப்படுவதில்லை என்றும் அயோத்தியா மண்டபம் விவகாரத்தை பொறுத்தவரை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்வதாகவும் முதலமைச்சருடனும், சட்ட வல்லுநர்களுடனும் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றம் கூறிய கருத்தை கவனத்தில் கொண்டு இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் எனக் குறிப்பிட்டார்.

சப்பரம் பவனி
தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் சப்பரம் பவனி வரும் விழாவை யாருக்கும் தகவல் அளிக்காமல் அந்தப் பகுதி மக்களே நடத்தியுள்ள்ளார்கள் என்றும் இது தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறைக்கு எந்த தகவலும் முன்கூட்டியே இல்லை எனவும் தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பான விளக்கத்தை ஏற்கனவே நேற்று சட்டசபை கூறியிருப்பதாகவும், இனி வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

உரிய கோயில்களுக்கு
வெளிநாடுகளில் இருந்து மீட்கப்படும் சிலைகள் தற்போது அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டு வரும் நிலையில், அந்த சிலைகள் எந்த கோயில்களுக்குச் சொந்தமானது என ஆதாரங்கள் கிடைக்கும்பட்சத்தில் முறைப்படி உரிய கோயில்களுக்கு அவற்றை கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications