பெண்களை ஆபாசமாக பேசிய ஆ.ராசாவின் எண்ணங்கள் தூய்மையாக இல்லை! செங்கோட்டையன் கொந்தளிப்பு
சென்னை: திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எண்ணங்கள் தூய்மையாக இல்லை. எனவே அவரது கருத்துகளுக்கு நான் மதிப்பளிப்பதும் இல்லை என வருவாய் பேரிடர் துறை அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற செங்கோட்டையன், இன்று மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

நிதிக் கசிவுகளை சரிசெய்து, நிதி வீண் விரயமின்றி துறைகள் செயல்பட்டு, மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதே முதலமைச்சர் விஜய்யின் கனவு என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆற்றலை மெருகேற்றுவதே முதலமைச்சர் விஜய்யின் முதன்மை எண்ணமாகும். 'எல்லோரும் எல்லாம் பெற வேண்டும்' என்ற நோக்கத்தில்தான் இந்த அரசு இயங்குகிறது.
சிலர் கேள்வி எழுப்பக்கூடும் என்றாலும், மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தினமும் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வித் தேவையான வருமான, இருப்பிடச் சான்றிதழ்கள் இனி பள்ளிகளிலேயே சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்படும்.
நிதிக் கசிவுகள் எங்கெங்கு உள்ளன என்பதை நிதித்துறை நன்கு அறியும் எனவும், அவற்றைச் சரிசெய்து, நிதி சிந்தாமல் சிதறாமல், முதல்வர் விஜய்யின் இந்த கனவை அந்தந்த துறைகள் நிறைவேற்றும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.
தவெக அமைச்சரவையில் விசிகவும், ஐயூஎம்எல்லும் இணைந்தது குறித்து திமுக எம்பி ஆ.ராசா ஆபாசமாக பதிவிட்டிருந்தார். தனது ட்விட்டர் பதிவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த பதிவை நீக்கிவிட்டார்.
முன் "ஏற" தரப்பட்ட ஏணியும், மூட சாதியை நொறுக்க வேண்டிய சிறுத்தையும் வெறும் விசில் சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்... என்று கூறி அதன் பிறகு பெண்களை அவமதிக்கும் வகையில் இரு வரிகளை ராசா கூறியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு விசிக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தன. ஆ.ராசாவின் பேச்சுக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்ல போகிறார், கனிமொழி இதுவரை கண்டிக்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தனர்.
ஆ.ராசாவின் பதிவுக்கு விசிக முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கூறியிருப்பதாவது:
அதிகாரம் எளியவர்க்கு
அதிலென்ன ஆத்திரம்
ஆற்றாமையால் அள்ளிவீசும்
அவதூறுகள் அசைத்திடாது
அமைதியாய் கடப்பது
அநாகரீகம் தவிர்க்கவே.
அநீதி தொடர்ந்து
அனைத்தும் உரைத்தால்
அணைக்க முடியா
அனலில் தகித்து போவீர்! என கடுமையாக எச்சரித்திருந்தார்.
அது போல் ஆ.ராசாவை கண்டித்து விசிகவினர் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து திருமாவளவனிடம் கேட்ட போது அவர் கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்றுவிட்டார்.
இதுகுறித்து செங்கோட்டையனிடம் கேட்ட போது அவர் கூறியிருப்பதாவது: திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எண்ணங்கள் தூய்மையாக இல்லை. எனவே அவரது கருத்துகளுக்கு நான் மதிப்பளிப்பதும் இல்லை என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications