காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்.. புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். அவர் புழல் சிறைக்கு 108 ஆம்புலன்ஸ் முலம் அழைத்து செல்லப்பட்டார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

அப்போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற அனுமதி பெற்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார். அவருக்கு அங்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவ சிகிச்சை காரணமாக தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார். அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத்தும் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 26 ஆம் தேதி வரை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் இருப்பதாக கூறி அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 4-ந்தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. நீதிபதி ஜெ.நிஷா பானு, செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அதேவேளையில், நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, செந்தில் பாலாஜியை கைது செய்ததில் சட்டவிரோதம் இல்லை என்று தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கை 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். அவர் அளித்த தீர்ப்பில் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் ஒருவரை கைது செய்தால், கைது செய்யப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அமலாக்கத்துறை அதிகாரிகளின் உரிமையாகும். செந்தில் பாலாஜி கைதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை. அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது" என்று தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார். புழல் சிறையில் செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட உள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் நடைமுறைகளை அமலாக்கத்துறை தொடங்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications