'எனது கருத்தை கேட்காம உத்தரவு பிறப்பிக்காதீங்க' உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி கேவியட் மனு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அமலாக்கத்துறை கைது செய்த போது செந்தில் பாலாஜிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாகவும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த 15 ஆம் தேதி இரவு காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.
தொடர்ந்து அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி இருந்து வரும் நிலையில், எட்டு நாட்கள் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். எனினும் பல்வேறு நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்தது. செந்தில் பாலாஜியை கடந்த 16-ந்தேதி மாலையில் இருந்து அமலாக்கத்துறையினர் காவலில் எடுக்க கோர்ட் அனுமதி அளித்தது.
இன்றுடன் 5 நாட்கள் ஆகியும் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையால் விசாரணை நடத்த முடியவில்லை. வருகிற 23-ந்தேதி மாலை 3 மணிக்கு செந்தில் பாலாஜியை காணொலி வாயிலாக ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது தரப்பு கருத்தை கேட்காமல் அமலாக்கத்துறை மேல் முறையீட்டு மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று கோரியுள்ளார். செந்தில் பாலாஜிக்கு நாளை காலை அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications