அமைச்சர் பதவியேற்ற 1 மணி நேரத்தில் டிஆர்பி ராஜாவுக்கு அடித்த யோகம்! ரூ.20,000 கோடி முதலீடு ஒப்பந்தம்
சென்னை: அமைச்சர் பதவியேற்ற ஒரு மணி நேரத்தில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் கலந்துகொண்டார் டி.ஆர்.பி.ராஜா.
இந்த முதலீட்டு ஒப்பந்தத்துக்கான பணிகளை ஏற்கனவே தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு பக்காவாக செய்து வைத்திருந்த நிலையில், அவரையும் இந்த விழாவில் முன்னிலைப்படுத்தி பெருமைப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
பொதுவாக புதிதாக அமைச்சர் பொறுப்பேற்பவர்கள் தங்கள் துறையை பற்றி தெரிந்துகொள்ளவே ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை ஆகக்கூடும்.

ஆனால் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவியேற்ற ஒரு மணி நேரத்தில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்துடான 20,000 கோடி ரூபாய் முதலீட்டு ஒப்பந்தம் நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம், ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், இந்தியாவின் முதல் நுண்திறன் நகர்வு ஆற்றல் தீர்வுகள் (smart mobility solutions) வழங்குநராகவும், சீருந்து ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நிறுவனமாகவும் உள்ளது.
அதன் தொடக்கத்திலிருந்தே, 'மனிதகுலத்திற்கான முன்னேற்றம்' என்ற ஹூண்டாயின் உலகளாவிய தொலைநோக்குப் பார்வையுடன், தொழில்துறைக்கு முன்னணி தொழில்நுட்பத்துடன் நகர்வு ஆற்றல் தீர்வுகளை வழங்குவதன் மூலம் வருங்கால சந்ததியினருக்கு நிலையான கண்ணோட்டத்தை உருவாக்குகிறது.
சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் முதலாவது ஆலை அமைப்பதற்கு 10.12.1996 அன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் 1340 விற்பனை மையங்களையும், 1502 சேவை மையங்களையும் கொண்ட வலுவான வலையமைப்புடன் செயல்பட்டு வருகிறது.
12 பிரிவுகளில் வலுவான சீருந்து மாடல்களைக் கொண்டுள்ளதுடன் முழுமையான ஒருங்கிணைந்த அதிநவீன உற்பத்தி ஆலை, மேம்பட்ட உற்பத்தி, தரம் மற்றும் சோதனை திறன்களை கொண்டுள்ளது.
இந்நிறுவனம், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா பசிபிக் போன்ற 85 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்தின் உலகளாவிய ஏற்றுமதி மையத்தில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) நிறுவனம் 20,000 கோடி ரூபாய் முதலீட்டில், தொழிற்சாலையை நவீனமயமாக்கல் மற்றும் நவீன வகை கார்கள் உருவாக்குதல், மின் வாகன மின்கலன் கூட்டப்பட்ட தொகுப்பு, மின் வாகன மின்னேற்று நிலையங்கள் அமைத்தல் போன்ற திட்டங்களை மேற்கொள்ள தேவையான வசதிகளை செய்து தருவது குறித்து தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்றையதினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
26 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், மேலும் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்து தனது தொழில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள முன்வந்திருப்பது, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் மற்றும் தொழில் செய்வதற்கு உகந்த சூழலை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளதற்கும், தெற்காசியாவிலேயே முதலீட்டிற்கு மிகவும் உகந்த இடமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதற்கும் மேலும் ஒரு சான்றாகும்.












Click it and Unblock the Notifications