சென்னையின் முக்கிய ஏரியாவில் துளை போடும் “பவானி”.. சுரங்கத்துக்குள் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். ராயப்பேட்டை பகுதியில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகளை இன்று உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். மெட்ரோ ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் பால்பண்ணை - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக ராயப்பேட்டையில் இருந்து ஆர்.கே.சாலை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதற்காக, "பவானி" என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த இயந்திரத்தின் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அவரது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வரும் சென்னை மெட்ரோ பணிகளை இன்று அவர் தொடங்கி வைத்துள்ளார்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (45.4கி.மீ) 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ.) 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாதவரம் பால்பண்ணை - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், ஒரு பகுதியாக ராயப்பேட்டையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி 910 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி இன்று தொடங்கியது.

இந்த பணியை மேற்கொள்ள "பவானி" என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தின் சுரங்கம் தோண்டும் பணியை, சென்னை ராயப்பேட்டையில் தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு முயற்சிகள் துறை முதன்மை செயலர் ஹார் சகாய், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, ஆலப்பாக்கத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலப்பாதை அமைக்கும் பணிகளை அமைச்சர் உதயநிதி பார்வையிட்டார். 4-வது மற்றும் 5-வது வழித்தடங்கள் 3.7 கி.மீ. தொலைவுக்கு இணையும் வகையில், இரட்டை அடுக்கு மேம்பாலப்பாதை அமைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ ரயில் பணிகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்கிறார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம், சென்னையின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ ரயில் Phase-2 திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இராயப்பேட்டையில் நடைபெற்று வரும் மெட்ரோ திட்டப்பணிகளை இன்று ஆய்வு செய்தோம்.
21.5 மீட்டர் ஆழத்தில் அமையவுள்ள இராயப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, இராயப்பேட்டை - இராதாகிருஷ்ணன் சாலை இடையேயான மெட்ரோ வழித்தடத்தை உருவாக்கிடும் வகையில், 'பவானி' எனும் துளையிடும் எந்திரத்தின் (Tunnel Boring Machine) பணியை இன்று தொடங்கி வைத்தோம்.
இராயப்பேட்டை மெட்ரோ நிலையப் பணிகள் மட்டும் ரூபாய் 250 கோடி மதிப்பில் நடைபெறவுள்ள நிலையில், அவற்றை உரிய காலக்கெடுவுக்குள் முடித்திட அதிகாரிகள் - அலுவலர்களை வலியுறுத்தினோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications