கார் ரேஸா அல்லது நாய் ரேஸானு கிண்டல் பண்ணாங்க.. ஆனால் அவங்களே ‘பாஸ்’ கேட்டாங்க! போட்டுடைத்த உதயநிதி
சென்னை : சென்னை ஃபார்முலா 4 ரேஸில், சிறிதாக விபத்து நடந்திருந்தால் கூட அதனை ஊதி பெரிதாக்க நிறைய பேர் காத்துக் கொண்டிருந்தார்கள் எனவும், ரேஸ் டிராக்கில் இரண்டு நாய்க்குட்டி உள்ளே ஓடி வந்த நிலையில், நாய் ரேஸ் நடத்துகிறார்களா அல்லது கார் ரேஸ் நடத்துகிறார்களா என்று விமர்சித்தார்கள் என கூறியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஃபார்முலா-4 இரவு நேர கார் பந்தயம் இரு நாட்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில், ஃபார்முலா 4 போட்டியினை சிறப்பாக நடத்திட உறுதுணையாய் பணியாற்றிய பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

தொடர்ந்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய அவர், தூய்மை பணியாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.
தொடர்ந்து பேசிய அவர்,” இந்த பந்தயம் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் இருந்தது. இப்பந்தயம் நடந்து அதுக்கு ஒரு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடத்துவது ஒரு வித்யாசமான ஒரு அனுபவமாக இருக்கின்றது. தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக நடைபெற்ற சென்னை Formula 4 Racing Street Circuit இரவு நேர கார் பந்தயத்தை மிகப்பெரிய மாபெரும் வெற்றி பந்தயமாக்கிய, வெற்றி நிகழ்ச்சியாக ஆக்கிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த Formula 4 கார் ரேஸ் எப்போதுமே ஒரு தனித்துவமான ஒரு இடத்தை கண்டிப்பாக பிடித்திருக்கும். இந்த மாபெரும் வெற்றியை சாத்தியமாக்கியவர்கள் நீங்க மட்டும்தான். எனவே உங்களையெல்லாம் சந்தித்து நன்றி தெரிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். சென்னையில் நடந்த Formula 4 ரேஸ் இன்றைக்கு உலகமே புகழ்ந்து கொண்டு இருக்கிறது. வியந்து பார்க்கின்றது. எல்லோரும் பாராட்டுகிறார்கள். வாழ்த்துகிறார்கள்.
இந்த போட்டியை எவ்வளவோ பாதுகாப்பா நடத்துறீங்களோ அது தான் இந்த போட்டியோட உண்மையான வெற்றி, அப்படின்னு நம்மோட முதலமைச்சர் அவர்கள் மீண்டும் மீண்டும் நம்ம கிட்ட சொல்லி கொண்டே இருந்தார்கள். எந்த ஒரு சின்ன அசம்பாவிதமோ சிறு விபத்து கூட ஏற்பட கூடாது என்று முதலமைச்சருக்கு வாக்குறுதி கொடுத்துட்டு தான் இந்த போட்டியை நடத்த முடியும்னு நாங்க முடிவு செய்தோம். முதலமைச்சர் உங்களுக்கு கொடுத்த அந்த வாக்குறுதியை 100% காப்பாத்தி இருக்கோம் என்றால் அதுக்கு இங்க வந்துருக்க உங்களுடைய களப்பணி தான் காரணம்
சில வீடியோ ஷார்ட்ஸ் வந்தது. நீங்கள் கூடப் பார்த்திருப்பீர்கள். அதுல ஒரு பக்கம் ரேஸ் வந்து அழகா நடந்துட்டு இருந்தது, இன்னொரு பக்கம் ரோட்டுல அழகா போக்குவரத்து தடையின்றி இயங்கி கொண்டிருந்தது. அதை பார்த்தப் பிறகு விமர்சனம் செய்ய எதுவுமே இல்லை என்று பாராட்ட ஆரம்பித்தார்கள். அதற்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சிறிதாக விபத்து நடந்திருந்தால் கூட அதனை ஊதி பெரிதாக்க நிறைய பேர் காத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் இரண்டு நாய்க்குட்டி உள்ள ஓடி வந்துவிட்டது.
அதனைக் கூட விமர்சனம் பண்ணினார்கள். நாய் ரேஸ் நடத்துகிறார்களா அல்லது கார் ரேஸ் நடத்துகிறார்களா என்று விமர்சித்தார்கள். இந்த F4 போட்டி நகரத்தில் நடத்துகிறோம். F1 ரேஸில் கூட நாய் குட்டி, முயல் குட்டி, மான் குட்டி எல்லாம் உள்ளே வந்துவிடும். இது கூட தெரியாத அறிவாளிகள் தான் நம்மை விமர்சனம் செய்துக் கொண்டிருந்தார்கள். அதனை எல்லாம் தவிடுபொடியாக்கி இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்து உள்ளீர்கள். ரேஸ் நடந்த இரண்டு நாளிலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நீங்கள் நடத்தி காட்டியிருக்கீறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இறுதியாக ஒரே ஒரு விஷயம் Formula 4 நாம் வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டோம். 10 நாள் ஆகிவட்டது. ஆனால் பணிகள் இன்னும் முடியவில்லை. எப்படி நாம் ஏற்பாடுகளை செய்தோமோ அதே மாதிரி சாலைகளை அந்த போட்டி நடந்த இடத்தை எல்லாம் பழைய நிலைமைக்கு நாம் கொண்டு வந்தாக வேண்டும். ஏற்கனவே அமைத்த தடுப்புகளை அப்புறப்படுத்துறது. சாலையை சரி செய்வது, அந்த பணிகளும் இப்போ தொடர்ச்சியா நடந்துக் கொண்டிருக்கிறது. உங்களை எல்லாம் பாராட்டுகின்ற அதே வேளையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அந்த அப்புறப்படுத்துகின்ற பணிகளையும், நீங்கள் கவனமாக செய்து முடிக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்.
ஆரம்பத்தில் எத்தனை ஸ்டாண்டு போடுகிறோம் என்று சொன்ன போது கிட்டத்தட்ட 8000 ஆயிரம் பேர் அமர்வதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்படும் என்று சொன்னார்கள். நான் அவர்களிடம் 8000 பேர் வருவார்களா, எப்படி ticket sales பண்ண போகிறீர்கள் என்றுக் கேட்டேன். கண்டிப்பாக வருவார்கள் என்று சொன்னார்கள். நாங்கள் நினைத்ததை விட அதிகமான ticket sales நடைப்பெற்றது. யார் இந்த கார் ரேஸ் நடத்தக் கூடாது, எப்படியாவது நிப்பாட்டனும் அப்படின்னு நினைச்சாங்களோ அவங்க தான் இரண்டாவது நாள் எங்களுக்கு ticket கிடைக்காதா, எங்களுக்கு pass குடுங்க அப்படின்னு கேக்குற அளவுக்கு மிக சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள் என்று சொல்லலாம்.
3 நாள் நடக்க வேண்டிய ரேஸ் இது, வெள்ளி, சனி, ஞாயிறு. ஆனால் முதலமைச்சர் சொல்லிவிட்டார். 3 நாட்கள் வேண்டாம் இரண்டு நாளில் நடத்தி முடியுங்கள். பொது மக்களுக்கு எந்த விதமான இடையூறும் இருக்கக்கூடாது என்று சொன்னதால் இரண்டே நாளில் நடத்தி முடித்தோம். சனிக்கிழமை அன்று கார் ரேஸ், எவ்வளவு விறுவிறுப்பாக போகுமோ அதனை விட விறுவிறுப்பாக கார் ரேஸ் நடக்குமா நடக்காதா என்ற விறுவிறுப்பு நிறைய இருந்தது. முக்கியமா பாதுகாப்பு பணிகளுக்காக தான் அந்த சான்றிதழ்காக தான் நாங்கள் நீண்ட நேரம் காத்து இருந்தோம். அதன் பிறகு அந்த பாதுகாப்பு சான்றிதழ் வந்த பிறகு சனிக்கிழமை மாலையிலிருந்து ரேஸ் ஆரம்பித்து ஞாயிறு இரவு 10.30 மணி வரை மிக சிறப்பாக நடந்தது.” என்றார்.












Click it and Unblock the Notifications