ஆட்டம் காணும் பனையூர்.. போர்க் கொடி தூக்கும் மா.செ.க்கள்! உடையும் தவெக.. விஜய்க்கு இரட்டை தலைவலி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்களைக் கூட எட்டாத நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் அமைச்சர் பதவி விவகாரம் கட்சிக்குள் நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, விஜய் மக்கள் இயக்கத்திலிருந்தே கட்சிக்காக பணியாற்றிய மாவட்டச் செயலர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள், தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மேலும் ஒரு விவகாரமும் விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக தவெக வட்டாரங்கள் சொல்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் தற்போது 30 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கும் அமைச்சரவையில் இடம்வழங்கப்பட்டுள்ளது.

TVK Vijay

ஆனால், கட்சியின் தொடக்க காலம் முதலே, குறிப்பாக, விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து உழைத்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது கட்சிக்குள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

தவெக அமைச்சர்கள்

தேர்தலுக்கு முன்பு, மக்கள் இயக்கத்தில் இருந்து செயல்பட்டவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கட்சிக்குள் புதிதாக வந்த சிலருக்கு முக்கிய பொறுப்புகளும், சட்டப்பேரவை தேர்தலி போட்டியிடும் வாய்ப்புகளும் வழங்கப்பட்டதாக சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்களாம். பனையூர் வட்டார தகவல்களின்படி, தஞ்சாவூர் சரவணன், ஈசிஆர் சரவணமூர்த்தி, மதுரை கல்லாணை, தங்கபாண்டி, காஞ்சிபுரம் முனிரத்தினம், சைதாப்பேட்டை அருள்பிரகாசம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சரவை வாய்ப்பை எதிர்பார்த்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அமைச்சரவை அமைப்பில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

ராஜ்மோகன்

மாறாக, சமீப காலத்தில் கட்சியில் இணைந்த ராஜ்மோகன், ஆதவ், சிடிஆர், அருண்ராஜ் உள்ளிட்ட சிலர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டது மூத்த நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை அறிவிக்கப்பட்ட உடனேயே சிலர் கட்சித் தலைமையிடம் தங்களது அதிருப்தியை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது சில எம்.எல்.ஏ.க்கள் நேரடியாக அமைச்சர் பதவி கோரி கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மாவட்டச் செயலாளர்

அதேபோல் தற்போது அமைச்சர்களாக உள்ள சிலர் மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் எதிர்பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் எதிர்காலத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என்ற தகவல்கள் பரவத் தொடங்கியுள்ளன. இதனால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சில மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உட்கட்சி அதிருப்தி

இதற்கிடையில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட அமைப்புகளில் மாற்றம் செய்யும் யோசனையும் தலைமை மட்டத்தில் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள பெரிய மாவட்ட அமைப்புகளை பிரித்து, ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவல் வெளியானதும், தற்போதைய மாவட்டச் செயலர்கள் மத்தியில் புதிய அதிருப்தி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்க்கு சவால்

ஏற்கனவே கட்சி வளர்ச்சிக்காக பல ஆண்டுகள் உழைத்த நிலையில், தற்போது தங்களின் அதிகார வரம்பு குறைக்கப்படுவது ஏன் என்ற கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளதாக தெரிகிறது. ஒருபுறம் அமைச்சர் பதவி எதிர்பார்க்கும் மூத்த எம்.எல்.ஏ.க்கள், மறுபுறம் மாவட்ட அமைப்பு மாற்றத்தால் அதிருப்தியடைந்த மாவட்டச் செயலர்கள் என இரண்டு தரப்பினரின் அழுத்தமும் விஜய்க்கு சவாலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம்

அதேநேரத்தில், அமைச்சரவை மாற்றம் நடந்தால் தற்போதைய சில அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற பேச்சும் கட்சிக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் அமைச்சர்களும் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சியின் ஆரம்ப கட்டத்திலேயே பதவி எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருவது, தமிழக வெற்றிக் கழக தலைமைக்கு புதிய அரசியல் சவாலாக மாறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+