மித்ராவிற்கு விரைவில் சிகிச்சை.. திரட்டப்பட்ட ரூ.16 கோடி.. இறக்குமதி வரியை நீக்கிய அமைச்சர் நிர்மலா!
சென்னை: சிறுமி மித்ராவின் மரபணு நோய்க்கான சிகிச்சை மருந்துக்காக ரூ. 16 கோடி திரட்டப்பட்ட நிலையில் அந்த மருந்துக்கான இறக்குமதி ஜிஎஸ்டி வரியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீக்கி அறிவித்துள்ளார்.
நாமக்கல்லைச் சோ்ந்த 2 வயதாகும் சிறுமி கே.எஸ்.மித்ராவின் உயிரை காப்பதற்காக கடந்த ஒரு மாதமாக மொத்த தமிழ்நாடும் ஒன்று திரண்டு போராடி வந்தது. இணையம் முழுக்க பொது மக்களும், பிரபலங்களும் மித்ராவின் உயிரை காப்பதற்காக நிதி வேண்டி கோரிக்கைகளை வைத்து வந்தனர்.
சிறுமி கே.எஸ்.மித்ரா மரபணு கோளாறான முதுகு தண்டுவட தசைநாா் சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளாா். நல்ல உடல்நிலையில் இருந்தவர் திடீரென நடக்க முடியாமல், சரியாக பேச, சுவாசிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.

சோதனை
இவரை மருத்துவர்கள் சோதனை செய்ததில் அரிய மரபணு கோளாறான முதுகு தண்டுவட தசைநாா் சிதைவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு உடனே ஸோல்கென்ஸ்மா ஜீன் தெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இந்த சிகிச்சைக்கு வெளிநாட்டில் இருந்து 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை வாங்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

ஆன்லைன்
இதையடுத்து மித்ராவிற்கு உதவுங்கள் என்று இணையத்தில் மிகப்பெரிய பிரச்சாரம் நடத்தப்பட்டது. சிறுமியின் அப்பா சதீஷ் குமாரும் மகளுக்கு நிதி வேண்டி இணையத்தில் கோரிக்கை வைத்து இருந்தார். குறைந்தது 10 ரூபாயாவது இந்த கணக்கிற்கு அனுப்புங்கள் என்று இணையம் முழுக்க பல நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கைகளை வைத்தனர்.

திரட்டப்பட்டது
1 மாத பிரச்சாரம் மூலம் சிறுமியின் சிகிச்சைக்கான 16 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. ஆனாலும் இந்த மருந்தை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் இருந்தது. 16 கோடி ரூபாய்க்கு இறக்குமதி வரியாக 6 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. சுங்க வரி மற்றும் சரக்கு சேவை வரி காரணமாக மருந்தின் இறக்குமதி விலை 22 கோடி ரூபாய் ஆனது.

திரட்டுவது கஷ்டம்
இந்த மீதம் உள்ள பணத்தை திரட்டுவது கஷ்டம் என்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் மத்திய அரசிடம் இந்த மருந்துக்கான இறக்குமதி வரியை நீக்கும்படி கோரிக்கை வைத்தனர். வரிசையாக தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலர் இந்த மருந்துக்கான இறக்குமதி வரியை இப்போது மட்டும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கைக்கு
இந்த நிலையில் மித்ராவின் மரபு சிகிச்சை மருந்துக்காக ரூ. 16 கோடி திரட்டப்பட்ட நிலையில் அந்த மருந்துக்கான இறக்குமதி ஜிஎஸ்டி வரியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீக்கி அறிவித்துள்ளார். எந்த விதமான கூடுதல் வரியும் இல்லாமல் மருந்தை இந்தியா கொண்டு வரும் வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். இதனால் விரைவில் மித்ராவிற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications