ஊரடங்கில் ஓட்டை உடைசல்... உலகிலேயே இப்படி அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகம் தான் -மு.க.ஸ்டாலின்
சென்னை: உலகத்திலேயே ஊரடங்கை, இத்தனை ஓட்டை உடைசல்களோடு, அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மத்திய பா.ஜ.க. அரசை மகிழ்விக்க செலவிடும் நேரத்தின் சிறு பகுதியையாவது, கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு செலவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

முதல் 5 இடங்களில் தமிழகம்
இறந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. சென்னையில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 279. இறப்பு விகிதம் குறைவு என்று, திரும்பத் திரும்பச் சொல்லி, தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு, தமிழக மக்களையும் ஏமாற்றலாம் என்று முதல்வர் நினைக்கிறார்.தொடர்ந்து துரத்திவரும் இந்த ஆபத்தை, தமிழக முதல்வர் துளியேனும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

கொச்சைப்படுத்துதல்
முழு ஊரடங்கு - ஊரடங்கு - தளர்வு ஊரடங்கு - தளர்வில் மேலும் தளர்வு என்று ஊரடங்குச் சட்டத்தையே தரம் தாழ்த்தி, தொடர்ந்து கொச்சைப்படுத்தியது தமிழக அரசு. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கி இருந்தால், இப்படி கேலிக் கூத்தான ஊரடங்குத் தளர்வுகள் செய்திருக்க வேண்டாமே!

சென்னை சீரழிகிறது
முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறைச் செயலாளர் என்ற அதிகார சக்கரத்தில் சென்னை மாநகரமே சிக்கி அழுந்திச் சீரழிந்து கொண்டிருக்கிறது. யாரையும் யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற ஆணவ அதிகார மையச் சண்டையில், அப்பாவித் தமிழக மக்கள், சூது வாது ஏதுமறியாதோர் உயிர்ப்பலியாகிச் சுருண்டு கொண்டு இருக்கிறார்கள்.

ரூ.5,000 கொடுங்கள்
அனைத்துத் தேவைகளையும் வழங்கி, மக்களை வீட்டுக்குள் தனிமைப்படுத்தி இருக்க வைப்பது அரசின் கடமை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்க வேண்டும். தங்களது தேவையைக் கவனித்துச் செய்வதற்கு அரசாங்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்துங்கள். மக்களின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு தவறுமானால், மக்கள் தங்கள் தேவைக்காக வெளியில் வர வேண்டிய அவசியத்தை அரசாங்கமே உருவாக்குவதாக ஆகிவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

திட்டமிடுங்கள்
தலைநகர் சென்னை என்பது மிகமிக மோசமான பேராபத்தைச் சந்தித்துக் கொண்டுள்ளது .இது எங்கே கொண்டு போய் விடுமோ என்ற கவலை ஏற்பட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. எப்போது, எப்படிக் காப்பாற்றப்படும் என்பதே சென்னையைப் பொருத்தவரையில் எண்ணிக் கணிக்க முடியாததாக உள்ளது. அடுத்தடுத்துத் தேவையான மருத்துவக் கட்டமைப்பைத் திட்டமிட்டு, கொரோனாவைத் தடுப்பதே அரசாங்கத்தின் கடமை என்பதை உணருங்கள்!












Click it and Unblock the Notifications