கத்தார் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கணும்.. ஜெய்சங்கருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்!
சென்னை: கத்தார் நாட்டில் கைது செய்யப்பட்ட 20 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஈரான் நாட்டில் இருந்து கடந்த 22-3-2021 அன்று அந்த நாட்டை சேர்ந்த ஹாசன் என்பவருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகில் குமரி மாவட்ட மீனவர்கள் 20 பேர், கேரள மீனவர்கள் 4 பேர் என மொத்தம் ஈரான் 28 பேர் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

25-3-2021 அன்று கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக ரோந்து சென்ற கத்தார் கடற்படையினர் குமரி மீனவர்கள் உள்பட 28 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஏப்ரல் 19-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களுக்கு அபராதம் அறிவிக்கப்பட்டது.
அனைவருக்கும் ரூ.2 கோடியே 80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த அபராத தொகை படகின் விலையை விடவும் இரண்டு மடங்காக இருக்கிறது என்று கூறி ஈரான் முதலாளி அபராத தொகையை கட்ட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அனைத்து மீனவர்களும் கடந்த 2 மாதங்களாக கத்தார் ஜெயிலில் அடைக்கப்பட்டு சரியாக உணவு கூட கிடைக்காமல் அவதிபடுகிறார்கள். எனவே குமரி மாவட்ட மீனவர்கள் உள்பட அனைத்து மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழகத்திலும் அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கத்தாரில் உள்ள தமிழக மீனவர்கள் உள்பட இந்திய மீனவர்க்ளை விடுவிக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், ' கடந்த 25-3-2021 அன்று கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 20 பேர், கேரள மீன்வர்கள் 4 பேர் கத்தார் கடற்படையினரால் கைது செய்ப்பட்டனர். கடந்த 3 மாதங்களாக அவர்கள் சிறையில் வாடி வருகின்றனர். மீனவர்களின் நிலை என்னவானது என்று தெரியாமல் அவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். எனவே கத்தார் சிறையில் வாடும் மீன்வர்களை இந்திய தூதரகம் மூலம் மீட்டு அவர்கள் சொந்த ஊர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications