கனிமவளங்களை பாதுகாப்பதில் கடுமை காட்டும் முதல்வர்! சாரை சாரையாக சிக்கும் லாரிகள்! பாயும் வழக்குகள்!
சென்னை: கனிமவளங்களை பாதுகாக்கும் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சற்று கடுமைகாட்டத் தொடங்கிய நிலையில் லாரிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் வழக்குகளும் பாய்ந்து வருகின்றன.
கனிமவளம்: இந்தியாவில் கனிமவளம் மிகுந்த மாநிலங்களில் தமிழ்நாடு மிக முக்கியமானது. இங்கு சுண்ணாம்பு, மாக்னசைட், கிராபைட், பாக்ஸைட், இரும்புத்தாது, ஹைட்ரஸ்சிலிகேட் நிறைந்த வெர்மிகுலைட், கனிமத்தாதுக்கள், கிரானைட் ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. இவைதவிர களிமண், சிலிக்கா, மண், லிக்னைட், எரிபொருளுக்குத் தேவையான தாதுப் பொருள்களான பெட்ரோலியம், இயற்கைஎரிவாயு, அணுமின் உற்பத்திக்குத் தேவையான தாதுப் பொருள்களான மோனஸைட், ருடைல், இலுமினைட் போன்ற தாதுக்களும் இங்கே கிடைக்கின்றன.
வளம் மிகுந்த மாநிலம்: லிக்னைட் தாது, நாட்டின் மொத்த அளவில் 55.3 சதவீதம் இங்கு கிடைக்கிறது. அதேபோல வெர்மிகுலைட் 75 சதவீதஅளவுக்கும், டுனைட் 69 சதவீத அளவுக்கும், கார்னெட் 59 சதவீதஅளவுக்கும், மோலிபென்டம் 52 சதவீதஅ ளவுக்கும், டைட்டானியம் 30 சதவீதமும் கிடைக்கும் வளம் மிகுந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.

தாது வளங்கள்: சேலம் மாவட்டத்தில் அதிக அளவில் கனிமவளங்கள் கிடைக்கின்றன. இங்குதான் மாக்னஸைட், டுனைட், பாக்ஸைட், சுண்ணாம்பு, இரும்புத்தாது, குவார்ட்ஸ், ஃபெல்ட்ஸ்பார், சோப்ஸ்டோன், கிரானைட்உள்ளிட்டவை அதிக அளவில் கிடைக்கின்றன. அதனாலேயே சேலத்தில் உருக்காலை அமைக்கப்பட்டது.
தாது வளங்களின் பயன்கள் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை. இந்த வளங்களை சட்டவிரோதமான முறையில் வெட்டி எடுப்பதும் விநியோகிப்பதும் மக்கள் விரோதச் செயலும் குற்றச் செயலுமாகும். இத்தகைய கனிமவளக் கடத்தல்களைக் கண்காணித்து, அதைக் கட்டுப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
2011ல் சட்டம்: கனிமவளங்களைப் பாதுகாக்கவும், அவற்றை முறையான அளவில் வெட்டி எடுப்பதன் மூலம் அரசுக்கு உரிய வருவாய் கிடைக்கவும், கனிமவளங்களைப் பிற மாநிலங்களுக்குக் கடத்துவதைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு 2011ல் சட்டம் இயற்றியது.
தற்போது உரிமம் அளிக்கப்பட்ட குவாரிகளில் வெட்டியெடுக்கப்படும் கனிமவளங்களின் அளவை ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், மாநிலத்தின் சில பகுதிகளில் சட்டவிரோதமாகக் கனிமவளங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டி எடுக்கப்படுகிறது; அதைத்தடுக்கவும் அரசு தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கன்னியாகுமரி, தென்காசி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்தச் சிறப்புக் குழுக்கள் மாநில எல்லையைத் தீவிரமாகக் கண்காணித்து தங்களது அறிக்கையை மாவட்ட ஆட்சியர்களுக்கு உடனடியாக அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூன் 25, 2023 வரை அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 431 வாகனங்கள் பறக்கும் படை மற்றும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு ரூ.1,76,93,348/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 39 வழக்குகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 39 வாகனங்கள் பறக்கும்படை மற்றும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு ரூ.16,34,100/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோதமாக கனிமங்களை ஏற்றிச் சென்ற 105 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 69 வழக்குகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டம்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 72 வாகனங்கள் பறக்கும்படை மற்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு ரூ.24,21,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோதமாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 11 வழக்குகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம்: தேனி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 10 வாகனங்கள் பறக்கும்படை மற்றும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு ரூ.3,80,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 17வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 9 வழக்குகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம்: திருநெல்வேலி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாகவும், சட்டவிரோதமாகவும் கனிமங்களை ஏற்றிச்சென்ற 48வாகனங்கள் பறக்கும்படை மற்றும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டம்: தென்காசி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 27 வாகனங்கள் பறக்கும்படை மற்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு ரூ.9,08,480/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 24வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 49 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இதர மாவட்டங்களிலும் விதிகளை மீறும் வாகன உரிமையாளர்கள் மீதுவழக்குப் பதிந்திடவும், வாகன ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications