ஸ்டாலின் சுறுசுறு.. இன்று இரவே கொல்கத்தா சென்றடைந்தார்.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பு
Recommended Video

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொல்கத்தாவில் நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக அவர் இன்று இரவு கொல்கத்தா சென்றடைந்தார்.
திமுக புதுப் பொலிவோடு அரசியல் களத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. கருணாநிதி காலத்தில் ஒரு பாணியில் கலக்கினால், இப்போது இன்னொரு தினுசில் அது புலிப் பாய்ச்சல் காட்டி வருகிறது.
திமுக தலைவராக கருணாநிதி இருந்த காலத்தில் தமிழகத்தைத் தாண்டிய கூட்டங்களுக்கு அவர் பெரும்பாலும் போவதில்லை. முரசொலி மாறன் அல்லது டி.ஆர். பாலு அல்லது தயாநிதி மாறன் அல்லது கனிமொழி என யாராவதுதான் பங்கேற்பார்கள். ஆனால் ஸ்டாலின் தலைவரான பின்னர் அவரே நேரடியாககளம் குதித்து விட்டார்.

பாஜகவுக்கு எதிராக தீவிரம்
கருணாநிதி காலத்தை விட இப்போது ஸ்டாலின் பாஜக எதிர்ப்பில் தீவிரம் காட்டுகிறார். கடுமையாக சாடுகிறார். அனல் பறக்க அறிக்கைகள் விடுகிறார். சுளீர் கேள்விகள் கேட்கிறார். பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் அணி திரட்டலில் திமுக முன்னணி வகிக்கிறது.

சோனியாவை வர வைத்து
சென்னையில் டிசம்பர் 10ம் தேதி நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை திரட்டி மாபெரும் கூட்டம் நடத்தினார் ஸ்டாலின். அக்கூட்டத்தில் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்பதையும் அறிவித்த அதிர வைத்தார். அது பெரும் விவாதங்களையும் பின்னர் எழுப்பியது. ஆனாலும் ஸ்டாலின் பின்வாங்கவில்லை.

அடுத்து ராஜஸ்தான்
அடுத்து ராஜஸ்தானுக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பதவியேற்பிலும் கலந்து கொண்டு கலக்கினார். மேலும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பஸ் பயணம் மேற்கொண்டார். அதில் ராகுலுக்கு பின் சீட்டில் ஸ்டாலின் அமர வைக்கப்பட்டு அவரது முக்கியத்துவத்தையும் காங்கிரஸ் கட்சி வெளிப்படுத்தியது.
|
கொல்கத்தா பயணம்
இந்த நிலையில் தற்போது நாளை கொல்கத்தாவில் மமதா பானர்ஜி தனது பலத்தை காட்டப் போகிறார். இந்த கூட்டத்திலும் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். ராகுல் காந்தி, சோனியா ஆகியோர் இதில் பங்கேற்கவில்லை. இருப்பினும் ராகுலை பிரதமராக அறிவித்த ஸ்டாலின் நாளை இதில் பங்கேற்கவுள்ளதால் ஸ்டாலின் மீது அனைவரின் பார்வையும் விழுந்துள்ளது. ஸ்டாலின் நாளை என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி இன்று இரவே ஸ்டாலின் கொல்கத்தா சென்றடைந்தார்.












Click it and Unblock the Notifications