May Day: "தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி! கருத்துக் கணிப்பு.." மே தினத்தில் சிவப்பு உடையில் ஸ்டாலின் பேச்சு
சென்னை: மே தினத்தையொட்டி உழைப்பாளர் சின்னத்தில் சிவப்பு நிற ஆடை அணிந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழியையும் ஏற்றார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், வரும் மே 4 ஆம் தேதி திமுக தொண்டர்களின் உழைப்பிற்கு பலன் கிடைக்கும். வெற்றி உறுதி என்பதை கருத்துக் கணிப்புகளை வைத்து கூறவில்லை, களத்தை பார்த்ததால் கூறுகிறேன். தமிழகத்தில் திமுக ஆட்சியே தொடரும்.

எல்லாருக்கும் எல்லாம் என்ற கோட்பாடுடன் திராவிட மாடல் அரசு மீண்டும் தொடரும். இந்த உழைப்பாளர் சிலையை நிறுவியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மே 1 ஆம் தேதி உழைக்கு வர்க்கத்திற்கு விடுமுறை வாங்கித் தந்தவர் அண்ணா. அதற்கு உறுதுணையாக இருந்தவர் கருணாநிதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உழைப்பாளர் தினம் மே 1 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 1886-ல் சிகாகோவில் 8 மணி நேர வேலைக்காக நடத்தப்பட்ட போராட்டத்தின் நினைவாக இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கடந்த 29ஆம் தேதி வெளியாகின. அந்த கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணியே வென்று ஆட்சியை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில கணிப்புகள்தான் அதிமுக ஆட்சி மலரும் என கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications