இந்தியாவை பெருமைப்பட வைத்த தமிழன்.. செஸ் உலகக்கோப்பை பைனலில் பிரக்ஞானந்தா! ஸ்டாலின், ராகுல் வாழ்த்து
சென்னை: செஸ் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
அஜர்பைஜான் நாட்டில் உலகக்கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயது வீரர் பிரக்ஞானந்தா நேற்று நடைபெற்ற உலகின் நம்பர் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், 4 டை பிரேக்கரின் முடிவில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதன் மூலம் 20 ஆண்டுகள் கழித்து செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமையையும், உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மிகக்குறைந்த வயதுடையவர் என்ற பெருமையையும் அவர் பெற்று உள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "செஸ் உலகக்கோப்பை போட்டியில்நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இறுதிப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்க்கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து மிளிருங்கள்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரக்ஞானந்தாவை வாழ்த்தி வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், "செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் நட்சத்திர பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் அற்புதமான சாதனையால் ஒட்டுமொத்த தமிழ்நாடு பெருமை கொள்கிறது. இறுதிப் போட்டியில் பெரும் வெற்றியை பெற்றிட நாங்கள் வாழ்த்துகிறோம்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உலகக்கோப்பை செஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள். மேக்னஸ் கார்ல்சனை உடனான இறுதிப் போட்டிக்கு வாழ்த்துக்கள். கோடிக்கணக்கான இந்தியர்கள் உங்களுக்காக கரகோஷம் எழுப்புவோம்." என்றார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, "உலகக்கோப்பை செஸ் தொடர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்து இருக்கும் எங்கள் இளம் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்தை தெரிவிக்கிறேன். அபாரமான நகர்வுகள் மூலமாக ஒவ்வொரு இந்தியனையும் நீங்கள் பெருமைப்பட வைத்து உள்ளீர்கள். இறுதிப்போட்டியில் எங்கள் செஸ் அதிசயம் மிகவும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications