ரயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்.. அன்ரிசர்வ் பெட்டி குறைப்பு குறித்து ஸ்டாலின் பதிவு
சென்னை: சமூக வலைத்தளம் முழுக்க ரயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்.. அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தோம்.. ஆனால் வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு என்று கூறி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்பதிவு இல்லாத பெட்டிகள் எண்ணிக்கை 4ல் இருந்து இரண்டாக ரயில்களில் குறைக்கப்பட்டதற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் அதிக எண்ணிக்கையில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணித்து வந்தாலும், தெற்கு ரயில்வே 13 ஜோடி ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பயணங்களுக்குக் கிடைக்கும் பொது வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிரடியாக குறைந்துள்ளது. நீக்கப்பட்ட முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுக்கு பதில், குளிர்சாதன வசதி கொண்ட மூன்று அடுக்கு பெட்டிகளாக(3ஏசி) மாற்றப்படும். பிப்ரவரி 15 அன்று தெற்கு ரயில்வே வெளியிட்ட உத்தரவின்படி, முன்பதிவு இல்லாத பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு பிப்ரவரி 21 முதல் அமலுக்கு வந்துள்ளது.

ரயில்வேயின் இந்த நடவடிக்கையின் காரணமாக, சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, வாலாஜா மற்றும் ஜோலார்பேட்டைக்கு பயணிக்கும் பயணிகள், குறிப்பாக ஆலப்புழா எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மெயில் மற்றும் காவேரி எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் அன்ரிசர்வ்டு பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளது.இதேபோல் சென்னை-மைசூரு காவேரி எக்ஸ்பிரஸ், சென்னை-திருவனந்தபுரம் மெயில், சென்னை சென்ட்ரல்-ஆலப்புழா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கொச்சுவேலி-நிலம்பூர் சாலை ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் மற்றும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ஆகிய ஐந்து எக்ஸ்பிரஸ் ரயில்களில் நான்கு பொது பெட்டிகளில் இரண்டு பெட்டிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை-ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்-ஹைதராபாத் டெக்கான் எஸ்எஃப் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி-மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், விழுப்புரம்-காரக்பூர் எஸ்எஃப் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் மற்றும் திருநெல்வேலி-புருலியா எக்ஸ்பிரஸ் ஆகிய எட்டு ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
தற்போது, இரண்டு பொது வகுப்பு பெட்டிகள் மட்டுமே உள்ள ரயில்களுக்கு ரயில்வே சுமார் 600 முதல் 700 வரை முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை ரயில்வே வழங்கி வருகிறது. இதில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 350 பயணிகள் மட்டுமே பயணிக்க இயலும். இந்த மாற்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரயில்வே வாரிய கொள்கையின்படி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரயில்வே கூறியுள்ளது. ரயில்வேயின் 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கையின்படி, ஒரு ரயிலுக்கு அதிகபட்சமாக முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை இரண்டை விட அதிகமாக இருக்கக்கூடாது.
இதனிடையே ரயில்வேயின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் காரணமாக இனி ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளில் நெரிசல் கடுமையாக அதிகரிக்கும் என்றும், முன்பதிவு செய்யப்படாத பயணிகள் இரவில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், டிக்கெட் பெற்ற பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே வடமாநிலங்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் இல்லாததால் ஏசி பெட்டியிலும், ஸ்லீப்பர் பெட்டியிலும் பயணிகள் ஆக்கிரமித்து பயணிப்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது. அப்படி அனுமதிக்காவிட்டால் ரயில்களை உடைக்கவும் அவர்கள் தயங்குவது இல்லை..இப்படித்தான் சூழல்கள் இருக்கிறது. இந்த சூழலில் முன்பதிவு பெட்டிகளை குறைப்பது நிலைமையை மோசமாக்கும் என்று பயணிகள் விமர்சித்து வருகிறார்கள்..
அதேநேரம் ஒரு ரயிலுக்கு வழங்கப்படும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ரயில்வேக்கு எந்த ஒரு கொள்கையும் இல்லை.. எவ்வளவு டிக்கெட் ஒரு நாளில் ஒரு ரயிலுக்கு வழங்கலாம் என்பது குறித்து தெளிவான முடிவினை இதுவரை ரயில்வே எடுக்கவில்லை. எனவே ரயில் பெட்டிகள் குறைப்பு நடவடிக்கையால், சென்னை-ஜோலார்பேட்டை பிரிவு மற்றும் கேரளாவின் பல பகுதிகள் போன்ற வழித்தடங்களில் கடுமையான கூட்ட நெரிசலை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும் போது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போரின் எண்ணிக்கை 100 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துவிட்டது. அதிக டிக்கெட் தேவை இருந்தபோதிலும், லோகோ பைலட்டுகள், டிக்கெட் சரிபார்ப்பு ஊழியர்கள் மற்றும் பல்வேறு வசதிகள் இல்லாத நிலை காரணமாக ரயில்வேயால் கூடுதல் ரயில்களை இன்று வரை பல்வேறு வழித்தடங்களில் இயக்க முடியாத கசப்பான நிலை தொடர்கிறது.
இந்நிலையில் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், சமூக வலைத்தளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்.. அதை அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தோம்.. ஆனால் வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு என்று கூறி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications