காங்கிரஸ் கட்சியைக் கேட்கவே வேண்டாம்.. என்ன தொலச்சி எடுத்துருவாங்க.. ஓப்பனாக உடைத்து பேசிய ஸ்டாலின்
சென்னை: மேடையில் இருப்பவர்கள் சும்மா இருப்பாங்களா; அதுவும் காங்கிரஸ் கட்சியைக் கேட்கவே வேண்டாம்.. என்ன தொலச்சி எடுத்துருவாங்க என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரியில் பேசியது கவனம் பெற்றது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், சுமார் ₹1,785 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அகத்தீஸ்வரம் ஊராட்சியில் ₹7.85 கோடி செலவில் கட்டப்பட்ட 90 புதிய வீடுகளை இலங்கைத் தமிழர்களுக்காகத் திறந்து வைத்தார். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 'திராவிட மாடல்' அரசு தொடர்ந்து பாடுபடும் என உறுதியளித்தார்.
கன்னியாகுமரியில் நடந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்துவிட்டு உங்களுக்கு என்று ஸ்பெஷல் அறிவிப்பு வெளியிடாமல் இருந்தால் சரியாக இருக்குமா? நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? மேடையில் இருப்பவர்கள் சும்மா இருப்பாங்களா; அதுவும் காங்கிரஸ் கட்சியைக் கேட்கவே வேண்டாம்.. என்ன தொலச்சி எடுத்துருவாங்க.. உரிமையோடு என்னிடம் கேட்பார்கள்.
அப்படி இருக்க இன்று கன்னியாகுமரிக்கு என்று சிறப்பு அறிவிப்புகளை வெளியிடுகிறேன். ஒன்றல்ல 6 அறிவிப்புகளை வெளியிடுகிறேன். முதல் அறிவிப்பு சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய குமரியின் பயணிகளுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஆற்றில் இருந்து அதிக அளவு நீர் வழங்க 28.20 கோடி மதிப்பீட்டில் புதிய நீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
முக்கடலும் சந்திக்கும் இந்த பகுதியில் புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் 25 கோடியில் அமைக்கப்படும். ஏவிஎம் கால்வாய் பல நாட்களாக குளச்சல் மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதை நிறைவேற்றுவோம். கன்னியாகுமரி களியக்காவிளை சாலையில் 9 கோடி ரூபாயில் சாலைகள் அகலப்படுத்தப்படும். பழம்பெரும் தூய மரியம்மை ஆலயம் 2 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்.
மீனவர்களுக்கான உதவித்தொகைகள் அனைத்தும் உயர்த்தி வழங்கப்படும். இதற்கான விரிவான அரசாணைகள் வழங்கப்படும். மீனவர்களின் இழப்பிற்கு காப்பீடுகள் கிடைக்கும் வரை உதவித்தொகையை ரூ.2000 வரை வழங்கப்படும்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருவர் ரூ.15 லட்சம் தரேனு வடை சுட்டமாதிரி, இப்போ வெரைட்டி வெரைட்டியா இபிஎஸ் வடை சுட்டுட்டு இருக்கார். ஆனால் இந்த வடைகளை நம்ப மக்கள் தயாராக இல்லை, பாஜக என்கிற டப்பா எஞ்சினை நம்பி அதிமுக இருக்கிறது. அதிமுக என்கிற மூழ்கும் கப்பலை நம்பி பாஜக இருக்கிறது. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான், ராஜ்ஜியம் கிடைக்காது.
தேர்தல் சீசன் என்பதால் இனி அடிக்கடி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவார். எத்தனை முறை அவர் இங்கு வருகிறாரோ அந்த அளவுக்கு NDA கூட்டணி தோற்கும். வளர்ச்சியடைந்த இடத்தில் பாஜக இருக்காது. பாஜக இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது.
திராவிட மாடல் அரசு தற்காலிக நிவாரணங்களை வழங்குவதோடு நில்லாமல், மக்களின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கும் நிலைத்தன்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது" என்று குறிப்பிட்டார். குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதி உதவி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குவதன் மூலம் அவர்களின் பொருளாதாரம் மேம்படும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications