காலை 10 மணிக்கு ஆளுநரை சந்தித்து.. ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் ஸ்டாலின்
சென்னை: திமுக திமுக சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலின், நாளை காலை 10 மணிக்கு ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தலில் 125 இடங்களில் வென்ற திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதிமுக கூட்டணி இதில் 75 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது.

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
இந்நிலையில், திமுக சட்டமன்ற குழுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க இன்று மாலை மணிக்குச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதியதாக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஸ்டாலின் தேர்வு
இக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலினைக் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்தார். அதையே திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வழிமொழிய மு.க.ஸ்டாலின் திமுக சட்டமன்ற குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர். அதன் பின்னர், சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்ற அவர், அங்கு அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். முன்னதாக திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமியை நேரில் சந்தித்து அவரிடம் ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார்.

நாளை ஆளுநரைச் சந்திக்கிறார்
திமுக சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் வழங்குகிறார்.

7ஆம் தேதி பதவியேற்பு
கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் பதவியேற்பா விழா நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் கூட்டத்தில் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக சார்பில் இதுவரை அண்ணா, கருணாநிதி ஆகியோர் முதல்வராக இருந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications