புதுவை திருமண விழாவில் ஸ்டாலின், வைகோ, சீமான் சந்திப்பு.. அருகருகே அமர்ந்து பேச்சு
சென்னை: புதுச்சேரியில் இயக்குநர் கவுதமன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் மூன்று பேரும் அருகருகே அமர்ந்து உரையாடிய காட்சி அரசியல் நாகரீகத்தை பறைசாற்றும் விதமாக இருந்தது. அதே நேரம் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்திலும் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.
இயக்குனர் கவுதமன் - மல்லிகா தம்பதியின் மகள் பரஞ்சோதிக்கும், க. குணாநிதி என்பவருக்கும் நாளை புதுச்சேரி பட்டானூரில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெறுகிறது. இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துமாறு கவுதமன் அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து இருந்தார்.

அருகருகே அமர்ந்த ஸ்டாலின் - வைகோ - சீமான்
இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், இந்த விழாவில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். மு.க ஸ்டாலின் வருவதற்கு முன்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்து இருந்தார். அதேபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வருகை தந்து இருந்தார். ஸ்டாலின் வருகை தந்ததை பார்த்ததும் எழுந்து நின்று சீமான் வரவேற்றார்.
தொடர்ந்து சீமானுடன் ஒரே சோபாவில் அமர்ந்து மு.க ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்தார். அருகிலேயே வைகோவும் அமர்ந்து இருந்தார். மூன்று அரசியல் தலைவர்களும் அருகருகே அமர்ந்து கொண்டு சிறிது நேரம் உரையாடினர். அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக பயணித்தாலும் சீமான் - ஸ்டாலின், சந்தித்து பரஸ்பரம் வணக்கம் செலுத்தியதோடு, ஒரே சோபாவில் அமர்ந்து பேசியது அரசியல் நாகரீகத்தை பறைசாற்றும் விதமாக இருந்தது.
அரசியல் களத்திலும் கவனம் பெறும் சந்திப்பு
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை தழுவியுள்ளது. இதையடுத்து திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறியுள்ள நிலையில், மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்று சொல்லப்படுகிறது. வரும் 26 ஆம் தேதி மதிமுக உயர் நிலை குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று வைகோ அறிவித்துள்ளார். வைகோவின் இரண்டு எம்.எல்.ஏக்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றனர்.
தேர்தல் முடிவுக்கு பிறகில் இருந்தே திமுகவை மதிமுக விமர்சித்து வரக்கூடிய நிலையில், ஸ்டாலின் - வைகோவின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது. அதேபோல, சீமான் கட்சி கடந்த தேர்தலில் 4 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்றது. வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி தொண்டர்கள் சிலர் பேசத் தொடங்கியுள்ளனர். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், ஸ்டாலின் - சீமான் சந்திப்பு கவனம் பெற்றுள்ளது. திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற எதேச்சையான சந்திப்பு என்றாலும் அரசியல் தலைவர்களின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்திலும் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications