அசுரன் to மூலபத்திரம், ஞாபகம் இருக்கிறதா! நீண்ட காலம் பிறகு ஜெய்பீம் படத்தை பாராட்டிய ஸ்டாலின்
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தை பார்த்து பாராட்டியிருந்த முதல்வர் ஸ்டாலின், அதன் பிறகு முதல் முறையாக, இன்னொரு திரைப்படத்தை பார்த்து ரசித்து அதை பொதுவெளியில் பாராட்டியுள்ளார்.
2019ம் ஆண்டு ரிலீசானது அசுரன் திரைப்படம். அந்த காலகட்டத்தில், நாங்குநேரி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில், ஈடுபட்டிருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
அசுரன் திரைப்படம் ஜாதி பிரச்சினையை பற்றி பேசியது. எனவே அதுகுறித்து, நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த கால கட்டம். எனவே, நாங்குநேரியில் 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக முகாமிட்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் 'அசுரன்' திரைப்படத்தைப் பார்த்தனர்.

ஸ்டாலின் பாராட்டு
இதுகுறித்து பின்னர், ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அசுரன்' படம் மட்டும் அல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதிய வன்மத்தை எதிர்த்து துணிச்சலுடன் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன். கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள் என்று பதிவு செய்திருந்தார்.

பாமக ராமதாஸ்
இந்த நிலையில்தான் அரசியல் ஆட்டம் ஆரம்பித்தது. ஸ்டாலின் வெளியிட்ட பாராட்டுக்கு, பதில் தெரிவித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், முரசொலிக்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைத்தால், பாராட்டுக்கள் என்று அதிரடியாக ஒரு கருத்தை கூறினார். ராமதாஸ் பற்ற வைத்த அந்த அரசியல் நெருப்பு பிறகு பல மாதங்களுக்கு பேசு பொருளாக மாறியது.

தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வரை சென்ற புகார்
முரசொலி அலுவலக பட்டாவை இணைத்து பதில் கூறினார் ஸ்டாலின். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது அல்ல என்று கூறி அவர் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் விடவில்லை பாமக. 1960ம் ஆண்டுகளில் வாங்கப்பட்ட முரசொலி இடத்திற்கான ஆவணங்களை விடுத்து, 20 ஆண்டுகளுக்கு பின்னர் பெறப்பட்ட பட்டாவை இணைப்பது ஏன்? அதற்கான மூலப்பத்திரம் எங்கே? என்று பாமக சார்பில் பதில் கேள்வி எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளராக இருந்த எச்.ராஜா ஆகியோரும், முரசொலி அலுவலகத்தின் மூலப்பத்திரத்தை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமா? என்பதை விசாரணை செய்யக்கோரி, பாஜக மாநில செயலாளராக இருந்த சீனுவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தார். இப்படியாக பெரும் பரபரப்பிற்கு வித்திட்டது அசுரன் படம் தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவு.

ஸ்டாலின் பார்த்த ஜெய்பீம்
இதன்பிறகு நீண்ட காலமாக எந்த படத்தையும் அவர் பாராட்டி பதிவிட்டது இல்லை. இப்போது சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தை பார்த்து அறிக்கை வெளியிட்டு பாராட்டியுள்ளார் ஸ்டாலின். இதோ அவரது அறிக்கை: ஜெய்பீம் படக் குழுவினருக்கு வணக்கம்! நேற்றையதினம் 'ஜெய்பீம்' படத்தைப் பார்த்தேன். அதன் நினைவுகள் இரவு முழுவதும் மனதைக் கனமாக ஆக்கிவிட்டன. விளிம்புநிலை இருளர் மக்களின் வாழ்வியலையும், அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதனைவிடத் துல்லியமாக, கலைப்பூர்வமாகக் காட்சிப்படுத்த இயலாது என்பதைக் காட்டிவிட்டீர்கள்.

காவல்துறை அதிகாரி தவறு
நடந்த ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து புனையப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும் அது பார்வையாளர் மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகமிகக் களமானதாக இருக்கிறது. சில நேரங்களில் சில காவல் துறை அதிகாரிகள் செய்யும் தவறுகள், அந்தத் துறைக்கே மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதேநேரத்தில், உண்மையை வெளிக்கொண்டு வர இன்னொரு காவல் துறை அதிகாரியே துணையாக இருக்கிறார் என்பதையும் காட்டி இருக்கிறீர்கள். நேர்மையும்,மனசாட்சியும் கொண்ட அதிகாரிகளால் உண்மை நிலைநாட்டப்படும் என்பதையும் காட்டி உள்ளீர்கள்.

ஒழுங்கீனங்களை தடுக்க
சட்டமும் நீதியும் கொண்டு எத்தகைய அவலத்தையும் துடைத்தெறிய முடியும் என்பதையும் எடுத்துச் சொல்கிறது இந்தப் படம். ஒரு வழக்கறிஞர் (சந்துரு), ஒரு காவல் துறை அதிகாரி (ஐஜி பெருமாள்சாமி) ஆகிய இருதரப்பும் நினைத்தால் சமூக ஒழுங்கீனங்களைத் தடுத்து நிறுத்த முடியும். அமைதியான, அதேநேரத்தில், அழுத்தமான வழக்கறிஞராக நண்பர் சூர்யா அவர்கள் திறம்பட நடித்துள்ளார். நடித்துள்ளார் என்பதைவிட, வழக்கறிஞர் சந்துருவாகவே வாழ்ந்துள்ளார். இக்கதையைத் தேர்வு செய்ததும், அதனைப் படமாக எடுத்ததும், அதில் தானே நடித்ததுமென மூன்று பாராட்டுகளை சூர்யா பெறுகிறார்.

பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்திற்கு 1 கோடி
கதைக்களத்தை கலைக்களமாக மாற்றிச் சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர் திரு. த.செ. ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற படங்கள் வரவேண்டும் என்பதே எனது ஆசையும் விருப்பமும் ஆகும். ஏராளமாக. இருளர் குறித்த படம் எடுத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டது எனக் கருதாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியினை நண்பர் சூர்யா அவர்கள் வழங்கியது என்னை நெகிழச் செய்தது. இருளர் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியாகும் இது. இதுபோன்ற செயற்கரிய செயல்களை அனைவரும் செய்ய வேண்டும்.

நீதிபதி சந்துரு
'ஜெய்பீம்' படம் பார்க்க நான் சென்றபோது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களைச் சந்தித்தேன். (நீதியரசர் என்று யாரையும் சொல்லக் கூடாது என்று சொல்பவர் அவர். ஆனாலும் எங்களுக்கு அவர் நீதியரசர்தான் !) அவர் என்னிடம் நீதியரசர் இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையைக் கொடுத்தார்கள். மிசா சட்டத்தின்படி நாங்கள் கைது செய்யப்பட்டது குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை அது. காவல் நிலையம் ஒன்றில் நடந்த இதேபோன்ற தாக்குதல்தான் சென்னை மத்திய சிறையில் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் இரவு எனக்கும் நடந்தது. என் மீது விழுந்த பல அடிகளைத் தாங்கியவர் மரியாதைக்குரிய சிட்டிபாபு அவர்கள். அதனால் அவரது உயிரே பறிபோனது. அன்று நடந்த சித்திரவதைகளை 'சிறை டைரி'யாக சிட்டிபாபு அவர்கள் எழுதி உள்ளார்கள். இந்த நினைவுகள் அனைத்தும் நேற்று 'ஜெய்பீம்' பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது என் மனக்கண் முன் நிழலாடியது.

சூர்யாவிற்கு வாழ்த்து
இப்படி பல்வேறு தாக்கங்களை என்னுள் ஏற்படுத்தக் காரணமான 'ஜெய்பீம்' படக் குழுவினருக்கு எனது பாராட்டுகள்! நண்பர் சூர்யாவுக்கு எனது வாழ்த்தும் நன்றியும்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தை ஸ்டாலின் பாராட்டியதை சூர்யா ரசிகர்கள் வரவேற்கிறார்கள். ஆனால் கூடவே அசுரன் பாணியில் புதிதாக எதுவும் பஞ்சாயத்து வந்து விடக் கூடாதே என்ற வேண்டுதல்களும் அவர்களுக்கு இருக்கிறது. இது ஒருபக்கம் என்றாலும், சமூக நீதி தொடர்பான படங்களை செலக்டிவாக பார்த்து ஸ்டாலின் பாராட்டுகிறார் என்பதை அசுரன் மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்களை அவர் பாராட்டியது உறுதிபடுத்துகிறது என்ற பாராட்டுகளும் ஒரு பக்கம் வருகிறது.












Click it and Unblock the Notifications