எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா
சென்னை: 2001 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அன்றைக்குச் சென்னை மாநகர மேயராகப் பதவியில் இருந்த ஸ்டாலினின் பதவியைப் பறிப்பதற்காகவே தனிச் சட்டம் இயற்றினார்.
இம்முறை வெளியான திமுக (2026) வேட்பாளர் பட்டியலில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயர் கடைசியாக இடம்பெற்றுள்ளது. ஒரு முதல்வர் வேட்பாளரின் பெயரை இறுதியாக இடம்பெறச் செய்வதன் மூலம் தன் அரசியல் நாகரிகத்தை மறைமுகமாக மக்களுக்கு உணர்த்தியுள்ளார் ஸ்டாலின்.

பொதுவாக ஜெயலலிதா தலைமையில் அதிமுக இயங்கிய வரை அவரது பெயரையே முன்னிலைப்படுத்துவார். அரசுத் திட்டங்களுக்குக்கூட ஒரு காலகட்டத்தில் அவரது பெயரையே வெளிப்படையாகச் சூட்டி மகிழ்ந்தார். 'ஜெ.ஜெ' அரசுப் பேருந்து கழகம் தொடங்கிப் பல உதாரணங்கள் அதற்கு உண்டு.
ஆனால், தன் ஆட்சிக்காலத்தில் ஸ்டாலின் தனது பெயரில் திட்டங்களை அறிவிக்கவில்லை. அவர் 'முதல்வர்' என்ற பொதுச் சொல்லையே முன்மொழிந்தார். சொந்த பெயரை அரசுத் திட்டங்களுக்குச் சூட்டுவதன் மூலம் ஏற்படும் பின்விளைவுகளை அவர் அறிவார். அதற்கான பாடத்தை ஜெயலலிதாவிடமிருந்து கற்றுள்ளார். எனவே வேட்பாளர் பட்டியலில் கூட இறுதியாக தன் பெயர் இடம்பெற அவர் அனுமதித்துள்ளார்.
தேர்தல் களத்தில் மு.கருணாநிதி போட்டியிட்ட முதல் தேர்தலிலிருந்து ஒருமுறை கூட தோல்வியடைந்ததே இல்லை. ஆனால், 1984 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்ற ஸ்டாலின் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கே.ஏ.கிருஷ்ணசாமி வென்றார். பின் 1989 முதன்முறையாகச் சட்டமன்றத்திற்குத் தேர்வானார். மூன்றாவது முறையாக 1991இல் உருவான ராஜீவ்காந்தி அலையில் ஸ்டாலின் ஆயிரம் விளக்கில் மூன்றாவது முறையாக நின்றபோதும் தோல்விதான் கிடைத்தது.
ஸ்டாலினுக்கு முகம் தந்த ஆயிரம் விளக்கு
2001இல் ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் 49,056 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற தாமாக வேட்பாளர் எஸ்.சேகர் 41782 வாக்குகளில் சுருண்டார். ஜெயலலிதா ஊழல் அரசியலை எதிர்த்து 96இல் தொடங்கப்பட்ட தமாகா, 2001இல் திமுகவை எதிர்த்து அதிமுக அணி கூட்டணியில் இடம்பெற்றிருந்தது.
96க்குப் பின் 2001 மற்றும் 2006 வரை ஆயிரம் விளக்குத் தொகுதியே ஸ்டாலினுக்கு வெற்றியளித்து வந்தது. பின்னர் அவர் கொளத்தூருக்கு 2011ல் மாறினார். கடந்த மூன்று முறை அத்தொகுதிக்கு அவர்தான் சட்டமன்ற உறுப்பினர். 2011, 2016, 2021 என மூன்று முறையும் அவரே வெற்றியாளர். கடந்த 2021 தேர்தலில் அவர் முன்பைவிட 105,522 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் வாங்கியது 35,138 வாக்குகள்தான்.
ஜெயலலிதா தான் ஆட்சியிலிருந்த 2002 ஆம் ஆண்டு ஸ்டாலினை முடக்குவதற்காகவே ஒரு தனிச்சட்டத்தை இயற்றினார். அச்சமயம் ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராகவும் மேயராகவும் இரண்டு அரசுப் பொறுப்புகளை வகித்து வந்தார். வேறு யாருக்கும் கிடைக்காத சலுகை அவருக்குக் கிடைத்திருந்தது. ஆகவே, ஒரு பதவியைப் பிடுங்க முடிவு செய்தார் ஜெ. 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற சட்டத்தை இயற்றினார்.
அதன்பொருட்டு ஏதேனும் ஒரு பதவியை மட்டுமே தக்கவைக்க வேண்டிய அழுத்தம் உண்டானது. "இன்னும் சிறிது நாட்களில் மேயர் பதவியா? எம்.எல்.ஏ. பதவியா என்பதை ஸ்டாலின் முடிவு செய்யவேண்டும்" என வெளிப்படையாக மன்றத்தில் முழங்கினார் ஜெயலலிதா.
இதை எதிர்த்து திமுகவோ அல்லது ஸ்டாலினோ நீதிமன்றம் செல்வார்கள் எனப் பத்திரிகைகள் எதிர்பார்த்தன. அதற்கு மாறாக 'ஒருவருக்கு ஒரு பதவி' என்பதை ஸ்டாலின் வரவேற்றார். ஏனெனில் பொதுநல வழக்குப் போடப்பட்டது. அதற்குச் சட்டத்திற்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்தது. அது திமுகவுக்கு மறைமுக சவாலானது. எனவே திமுக தரப்பு மெளனம் காத்தது.
முடிவில் ஸ்டாலின் தன் சட்டமன்ற பதவியைத் தக்கவைத்துக் கொண்டு மேயர் பதவியை இழக்க முன்வந்தார். ஏனெனில், மேயர் பதவிக்கு இருந்த அதிகாரத்தை ஜெயலலிதா குறைத்தார். மாநகர ஆணையரே நிதி நிர்வாகம் தொடர்பாகக் கடிதப் பரிவர்த்தனையை முதல்வருடன் வைத்துக் கொள்ள அரசாணை வெளியிட்டார். நிதியை மேயர் கையாள்வதிலிருந்து விலக்கப்பட்டார். அது அதிகார குறைப்பு. 'அதிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டது அரசு' என ஸ்டாலின் சொன்னார்.
பாரம்பரிய பெருமைமிக்க மேயர் பதவி
முன்னதாகவே அவர் மேயர் தேர்தலில் நிற்காமல் வேறு நபருக்கு அந்த வாய்ப்பை அளித்திருந்தால், இந்தச் சூழல் எழ வாய்ப்பற்று போய் இருக்கும் எனச் சிலர் கூறினர். அதற்கு ஸ்டாலின், "வெளிப்படையாகச் சொன்னால் நான் மேயர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்றே தெரிவித்தேன். தோழமைக் கட்சியான பாமக நிறுவனர் ராமதாஸ்தான் என்னைப் போட்டியிட அழுத்தம் கொடுத்தார்.
முன்னதாக நான் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்ததால், மீண்டும் நிறுத்தப்பட்டால் வெற்றி எளிதாகும் என்று தலைவருடன் வாதாடினார். ஆகவே நான் நின்றேன்" என்றார் ஸ்டாலின்.
ஸ்டாலினை இரண்டாவது முறையாக மேயராக முன்மொழிந்த ராமதாஸ்தான் அவரை துணை முதல்வராக்க வேண்டும் என முதல் குரல் எழுப்பியவர். சமீபத்தில், 'ராமதாசுக்கு வயதாகிவிட்டது. அவர் அப்படித்தான் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்' என ஸ்டாலின் பகைத்துக் கொண்டபோது ராமதாஸ், தான் தான் ஸ்டாலினைத் துணை முதல்வர் பதவிக்குப் பரிந்துரைத்தேன் என்பதை அடிக்கோடிட்டுச் சொன்னார்.
1996இல் திமுக சார்பில் ஸ்டாலின் சென்னை மாநகர தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் 2001இல் அதே பதவிக்கு வந்தார். முதலில் கவுன்சிலர்களால் மேயர் தேர்வு செய்யும் முறை இருந்தது. அதை மாற்றி மக்கள்தான் மேயரை தேர்வு செய்வார்கள் எனச் சட்டத்தை மாற்றியது திமுக.
மறைமுகமாக இரட்டைப் பதவியைக் காரணம் காட்டி ஜெயலலிதா, ஸ்டாலின் பதவியைப் பறித்தார். திமுக சார்பில் இவருக்கு முன்னதாக சிட்டிபாபு மேயராக இருந்தார். பின் தன் இடத்தை மா.சுப்பிரமணியனுக்கு விட்டுத் தந்தார் ஸ்டாலின்.
1996 முதல் 2001 வரை ஒருமுறையும் 2001 முதல் 2002 ஜூன் வரை இரண்டாவது முறையும் மேயர் பதவி ஸ்டாலினுக்குக் கிடைத்தது. இந்தப் பதவி வரலாற்றுச் சிறப்பு மிக்கது. நூற்றாண்டு கால சரித்த சிறப்பு மிக்க இந்த மாநகர சபைக்கு முதன்முதலாகத் துணை மேயர் பதவிக்குப் போட்டியிட்டவர் அகல்யா சந்தானம். இவரை எதிர்த்து ஏழு பேர் நின்றனர். அதில் ஒருவர் ம.பொ.சிவஞானம். அகல்யா சந்தானத்திற்குப் பூர்வீகம் சென்னைதான். இவர் 1916இல் பிறந்தவர். முதல் பெண் துணை மேயர் என்பதைத் தாண்டி வேறு முக்கியத்துவமும் இவருக்கு இருந்தது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் ஒரே சகோதரர் சி.என்.ராமையா தான் அகல்யாவின் தந்தை. பிரம்ம சமாஜத்தைத் தீவிரமாகக் கடைப்பிடித்தவர். அகல்யா தன் ஆறு வயதிலேயே தந்தையை இழந்தார்.
அப்பா சாதியைக் கடந்தவர் என்பதால் மகளும் இளம் வயது முதல் ஜாதி பாகுபாடு இல்லாது வளர்ந்தார். பள்ளியில் என்ன சாதி எனச் சேர்க்கையின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்தச் சுட்டி மகள் 'பெண் ஜாதி' என அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார் என்பது வியப்பான செய்தி. தன் 17ஆவது வயதில் வழக்கறிஞர் டி.எஸ்.சந்தானத்தை மணம் செய்துகொண்டார். இந்த சென்னை மேயர் நாற்காலியில் சத்தியமூர்த்தி போன்ற தேசிய தலைவர்கள் அமர்ந்துள்ளனர். பாரதியின் நண்பர் வி.சக்கரை செட்டியார் 1941 முதல் 42 வரை மேயராக வீற்றிருந்த இடம் இந்த ரிப்பன் மாளிகை.
எழுதியவர்: கடற்கரய்
-
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
நகைக்கடன் ரத்து.. வீட்டுக்கொரு LED டிவி? மாஸாக வெளியாகும் திமுகவின் தேர்தல் அறிக்கை! வேறு என்னென்ன? -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது.. மகளிருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறதா? -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
OPS: விருப்ப மனு கொடுத்தும் சீட் கிடைக்கலையே.. திடீரென அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மகன்! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி












Click it and Unblock the Notifications