'உள்ளாட்சியில் சுயாட்சி.. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம்..' கமல் சூளுரை
சென்னை: தமிழ்நாட்டில் மிக விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்குக் கடந்த அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் பெரும்பாலான இடங்களில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே வென்றன.
இந்தச் சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
இதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. திமுக, அதிமுக விருப்ப மனுக்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டன. தேமுதிக இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. அக்கட்சியின் தலைவர் கமல் சமீபத்தில் தான் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்திருந்தார். இந்தச் சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து அவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கமல் வெளியிட்ட வீடியோ
அந்த வீடியோவில், "உயிரே! உறவே! தமிழே! வணக்கம்! நலமாக உள்ளேன். நான் நலம்பெற முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று மருத்துவம். அதற்கு நிகரான மற்றொரு காரணம் உங்கள் அன்பு. என்மீது நீங்கள் வைத்துள்ள நலவிருப்பம். அதனால் தான் நான் மீண்டுவந்ததாக நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். நான் படுத்துக்கிடந்த நேரத்திலும் கூட தொடர்ந்து அயராது உழைத்த நம் மய்யத்தவருக்கு என் வணக்கங்கள், வாழ்த்துகள். தொடர்ந்து செய்யுங்கள்.

உள்ளாட்சியில் சுயாட்சி
உள்ளாட்சியில் சுயாட்சிக்காக குரல்கொடுத்துக் கொண்டிருக்கும் நம் மய்யம், கிராம சபையை பெரிதாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்த ஒரு சக்தி என்றால் மிகையாகாது. அது மட்டுமே நம் அடையாளமாக இருந்துவிடாமல், நடக்கவிருக்கும் நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் நாம் எதற்காக குரல் கொடுத்தோமோ, அதே களத்தில் இறங்கி வெற்றியும் காண வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என்னுடைய வாழ்த்துகளும் கூட.

நானே முன்னுதாரணம்
உங்கள் நடுவிலிருக்கும் கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு வேலையை பாருங்கள். எப்படி இந்தக் கோவிட் காலத்தில் உயிர் பயமின்றி நம் தோழர்கள் பணிபுரிந்தார்களோ, அதே துணிச்சலுடன் ஆனால் மிகவும் ஜாக்கிரதையாக இதை நீங்கள் செய்யவேண்டும். உங்கள் நலன் எனக்கு மட்டுமல்ல, நம் நாட்டிற்கும் மிக முக்கியம். நீங்கள் இந்தத் தேர்தல் பணிகளில் ஈடுபடும்போது எல்லா விதமான ஆயத்தங்களும், அதாவது இந்தத் தொற்றுக்கு எதிரான தற்காப்புகளை நீங்கள் மேற்கொண்டே ஆக வேண்டும். இந்த தொற்று நீங்கிவிட்டது அல்லது போய்விடும் என்ற நம்பிக்கையில் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்பதற்கான முன்னுதாரணமாக நானே இங்கு நின்றுகொண்டிருக்கிறேன்.

தற்காப்பு அவசியம்
நம்முடைய பலம், நம் தொண்டர்கள் தான். அவர்கள் ஆரோக்கியம் எனக்கு மிகவும் முக்கியமாகும். இந்தத் தேர்தல் வெற்றியை ஈட்டுவதற்கு உழைப்பு மட்டுமல்ல, முன் ஜாக்கிரதையும், தற்காப்பும் மிகவும் அவசியம். அதைச் செய்துகாட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன். வணக்கம். நாளை நமதே!" என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications