ஒரே நாடு ஒரே தேர்தல் இருக்கட்டும்.. முதலில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலை நடத்துங்கள்.. கமல் சுளீர்
சென்னை: இந்தியாவில் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதை விமர்சிக்கும் வகையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று வெளியிட்டார்.

நாடு முழுக்க மொத்தம் 543 தொகுதிகள் இருக்கும் நிலையில், இங்கே மொத்தம் ஏழு கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் முதற்கட்ட தேர்தல் வரும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில், 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதியும் நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல்: அதேபோல 4ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி நடக்கும் நிலையில், 5ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதியும், 6ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும் நடக்கிறது. கடைசிக் கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி நடக்கும் நிலையில், வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்துவதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது.
கமல்ஹாசன்: லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரே தேசம், ஒரே தேர்தலை நடத்துவதற்கு முன்பு முதலில் நாட்டில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முயற்சி செய்யலாமே" என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் Democracy Matters, One Nation One Election ஆகிய ஹேஷ்டேக்குகளையும் டேக் செய்துள்ளார்.
மத்திய அரசு நாடாளுமன்றத்திற்கும் நாட்டில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டும் என விரும்புகிறது. இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழு சமீபத்தில் தான் தனது பரிந்துரையை அரசுக்கு அளித்து இருந்தது. அதை விமர்சிக்கும் வகையிலேயே கமல்ஹாசன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துகளைக் கூறி வருகிறார்கள். கமலை எதிர்க்கும் பலரும் அவர் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இணைந்ததாலேயே இப்படிச் சொல்வதாகக் கூறி வருகிறார்கள்.
இந்தியா கூட்டணி: இந்த லோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். அவரது கட்சிக்கு லோக்சபா தேர்தலில் எந்தவொரு சீட்டும் வழங்கவில்லை.. அவர் லோக்சபா தேர்தலுக்கு திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மட்டும் செய்வார். அதேநேரம் ராஜ்யசபாவில் கமல்ஹாசன் கட்சிக்கு ஒரு இடத்தை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications