சாயம் வெளுத்தாச்சு.. தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.. விளாசிய கமல்!
சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம், மே 1-ம் தேதி உழைப்பாளர் தினம், ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் மற்றும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நாட்களில் அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.

கிராம சபை கூட்டங்கள்
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அதாவது சட்டமன்றம் , நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு. மேலும் ஒரு கிராமம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வும், கிராமத்தில் செய்ய வேண்டிய திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனையும் கிராம சபை கூட்டங்களில் முடிவெடுக்கப்படும்.

கொரோனாவால் ரத்து
இத்தகைய சிறப்பு மிக்க கிராம சபை கூட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டு குடியரசு தினம் அன்றும் நடத்தப்படவில்லை. மக்களின் உரிமைகளை தீர்மானிக்கும் கிராம சபை கூட்டங்களை இந்த ஆண்டு சுதந்திர தினம் அன்று கட்டாயம் நடத்த வேண்டும் என்று கமல்ஹாசனின் மக்கள்
நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக கோவை கலெக்டரிடமும் கமல்ஹாசன் மனு கொடுத்திருந்தார்.

கமல்ஹாசன் கண்டனம்
இந்த நிலையில் கொரோனா காரணமாக வருகிற 15-ம் தேதி சுதந்திர தினம் அன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சாயத்து தலைவர்களுக்கு கிராம சபை கூட்டங்கள் ரத்து தொடர்பான உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் இந்த உத்தரவுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாயம் வெளுத்து விட்டது
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ' கொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். தி.மு.க.வின் சாயம் வெளுத்துவிட்டது' என்று கடுமையாக குற்றம்சாட்டினார்.

மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ' கொரோனா பாதுகாப்பு விதிகளை காரணமாகச் சொல்லி, கிராம சபை கூட்டங்களை ரத்துச் செய்வது சரியல்ல. உரிய பாதுகாப்பு விதிகளை உருவாக்கி, கிராம சபை கூட்டங்களை நடத்திட தமிழக அரசு முன்வர வேண்டும்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications