மக்கள் நீதி மய்யத்தில் ஒரு 'வசூல்ராஜா'! அந்த ரூ. 30 லட்சம் வளர்ச்சி நிதிக்கு! கறார் காட்டினாரா கமல்?
சென்னை: விருப்பமனு கட்டணம் திருப்பி தரப்படாது என்றும் ரூ 30 லட்சம் கட்சி வளர்ச்சி நிதிக்கு சென்றுவிட்டது என்றும் கமல்ஹாசன் தரப்பு தெரிவித்துவிட்டதால் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், வரவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடாது என அறிவித்திருந்தார். ஆனால், தேர்தலில் களமிறங்க விருப்பமனுக்களுக்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்களைத் திருப்பி அளிப்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இது கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

"மாற்றம்" என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து, நடிகர் கமல்ஹாசனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனது அரசியல் கருத்துகளை அவர் தொடர்ந்து பேசி வந்தார். கட்சி தொடங்கிய பிறகு, 2019 மக்களவைத் தேர்தலில் மநீம கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றது.
2021 சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், பாஜகவின் வானதி சீனிவாசனிடம் நூலிழையில் தோல்வியடைந்தார். 2024 மக்களவைத் தேர்தலில் மநீம போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென திமுக கூட்டணியில் இணைந்தது. தேர்தலில் போட்டியிடாமல் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக அப்போது கமல்ஹாசன் அறிவித்தார்.
இப்படியாக, திமுக சார்பில் கமல்ஹாசனுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. தற்போது, 2026 சட்டசபைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் பயணிப்பதாகத் தெரிவித்திருந்தது. ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தையில், மநீம 6 தொகுதிகளைக் கோரிய நிலையில், திமுக 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்தது.
அந்த இரண்டு தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என திமுக நிபந்தனை விதித்ததாக சொல்லப்படுகிறது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட டார்ச்லைட் சின்னத்திலேயே களமிறங்குவோம் என மநீம மறுத்ததாம்.
இப்படியே இழுபறி நீடித்த நிலையில், சட்டசபைத் தேர்தலில் மநீம போட்டியிடாது என்றும், திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவதாகவும் கமல்ஹாசன் திடீரென அறிவித்துவிட்டார்.
கமல்ஹாசனின் இந்த முடிவை முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் வரவேற்றார். திருமாவளவனோ, மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எனினும், கமல்ஹாசன் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
தேர்தலில் போட்டியிட விருப்பம் கேட்டு விண்ணப்பக் கட்டணம் பெற்ற நிலையில், பின் போட்டியிடாதபோது பணத்தைத் திருப்பி அளிப்பது குறித்து கமல் எதையும் சொல்லவில்லையாம். இது கட்சியினரிடையே நிதி ரீதியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆழ்வார்பேட்டை வட்டாரத்தில் கேட்டபோது," சீட் கிடைக்கும் என நம்பி 60 நிர்வாகிகள் தலா ₹50,000 செலுத்தி விருப்பமனுக்களைப் பெற்றுள்ளனர். இதன்மூலம் கட்சிக்கு சுமார் ரூ.30 லட்சம் வசூலாகியுள்ளது.
"தேர்தலில் போட்டியிடாததற்கு கட்சி நடத்தி என்ன பயன்?" என நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக, திமுக கூட்டணியில் கோவை தெற்கு போன்ற தொகுதிகளில் மநீம வெல்லும் என நம்பியிருந்தவர்களின் நம்பிக்கையில் கமல்ஹாசன் மண் அள்ளிப் போட்டுவிட்டதாக அவர்கள் குமுறுகின்றனர்.
விண்ணப்ப கட்டணம் தொடர்பாக கட்சியினரின் குமுறல் குறித்து அறிந்த கமல்ஹாசன் தரப்பு, "விருப்பமனு கட்டணம் திருப்பி தரப்படாது. ரூ 30 லட்சம் கட்சியின் வளர்ச்சி பயன்படுத்தப்படுகிறது. அப்படியும் யாருக்காவது அந்த கட்டணம் வேண்டும் என்றால் கோரிக்கை மனு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளதாம். இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஏமாற்றமடைந்துவிட்டோமே என கவலையில் ஆழ்ந்துள்ளனராம்.












Click it and Unblock the Notifications