திருமா சந்தேகம் நியாயமானது.. ரஞ்சித் அக்கறை உண்மையானது.. கமல்ஹாசன் ஷார்ப் பதிவு
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் அருகே விசிக தலைவர் திருமாவளவன் சென்ற கார், வழக்கறிஞரின் பைக்கில் மோதியது தொடர்பாக பிரச்சனை எழுந்தது. இதில் வழக்கறிஞர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்தினார்கள். இதுதொடர்பாக திருமாவளவன் விளக்கம் கொடுத்து, இயக்குநர் பா. ரஞ்சித்தும் அதற்கு கருத்து தெரிவித்திருந்தார். இந்த பிரச்சனை தொடர்பாக தம்பி திருமாவின் சந்தேகம் நியாயமானது. இன்னொரு தம்பி பா. ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது. என்று தன்னுடைய பாணியில் மநீம தலைவர் கமல்ஹாசன் ஒரு பதிவு போட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் அருகே கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அவர் தன் காரில் திரும்பி செல்லும்போது, முன் பகுதியில் ராஜீவ் காந்தி என்கிற வழக்கறிஞர் சென்று கொண்டிருந்தார்.

விசிக - வழக்கறிஞர் பஞ்சாயத்து
திருமா சென்ற கார், ராஜிவ் காந்தியின் இரு சக்கர வாகனத்தில் உரசியுள்ளது. இதுதொடர்பாக ராஜீவ் காந்தி கார் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து அவர் மீது விசிக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது. விசிக மீது ராஜீவ் காந்தியும், ராஜீவ் காந்தி மீது விசிகவினரும் பரஸ்பரம் மாறி மாறி புகார் கூறினார்கள்.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் தன் எக்ஸ் பக்கத்தில், "உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரியவருகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில்உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது.
ரஞ்சித் பதிவு
எனவே, தமிழ்நாடுஅரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திடவேண்டுமென கோருகிறோம்." என்று முதல்வர் மு.க. ஸ்டாலின், காவல்துறையை டேக் செய்து கூறியிருந்தார்.
இந்தப் பதிவு ரீ போஸ்ட் செய்திருந்த திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், "உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அண்ணன் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார், இதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்." என்று அவரும் முதல்வரை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
கமல் டக்கர்
இந்தப் பதிவை ரீ போஸ்ட் செய்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன், "தம்பி திருமாவின் சந்தேகம் நியாயமானது. இன்னொரு தம்பி பா. ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது. தம்பி திருமாவளவன் சென்ற கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும். அவரது பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்." என்று கூறியுள்ளார். கமலின் இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications