பெண்களே.. தமிழக வரலாற்றிலேயே முதல்முறை.. சென்னையில் சுற்றி சுற்றி வரும் கேரவன்கள்.. ஒப்பனைக்கு ரெடி?
சென்னை: தமிழக வரலாற்றில் முதன் முறையாக சென்னை மாநகராட்சியில் பெண்களுக்காகவே நடமாடும் ஒப்பனை அறை வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமென சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணி மேம்பாட்டிற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.30.28 கோடி செலவில் 74 காம்பாக்ட்டர் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதே போல் நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.4.37 கோடி மதிப்பீட்டில் பெண்களுக்கான 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனங்களும் வாங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில் இந்த வாகனங்களின் செயல்பாட்டினை நேற்றைய தினம் ரிப்பன் கட்டிட வளாகத்தில் சென்னை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான நேரு கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.
இன்றைக்கு பெண்கள் பணிக்காக சொந்த ஊரிலிருந்து பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர். இத்தகைய சூழலில் பொது இடங்களில் கழிவறைகள் இல்லாமல் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஆங்காங்கே கழிவறைகள், ஒப்பனை அறைகள் இருந்தாலும் பெரும்பாலும் பயன்படுத்த முடியாத அளவிற்கு இருப்பதாகவே பெண்கள் கருதுகின்றனர்.
பேருந்து நிறுத்தங்கள், அவசர பணிக்காக வெளியில் செல்லும் பெண்களுக்காகவே சென்னையில் முதன் முதலாக பெண்களுக்காகவே நடமாடும் ஒப்பனை அறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை மையமாக கொண்டு இந்த ஒப்பனை அறை கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது சென்னையில் ஒரு மண்டலத்திற்கு 1 என்ற கணக்கில் மொத்தம் 15 நடமாடும் ஒப்பனை அறைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த ஒப்பனை அறையில் ஒரு கழிவறை சானிடரி நாப்கின், உடை மற்றும் சிறு அறை, தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுவதற்கான தனி அறை ஆகியவை அடங்கியுள்ளது.
இந்த திட்டம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்த சென்னை மேயர் பிரியா, பெண்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் இந்த வாகனம் நிறுத்தப்படும் என்றும் இதனை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் போதுமான அளவிற்கு கழிப்பறைகளை பொது மக்கள் வசதிக்காக ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்னும் நோக்கில் சென்னை மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தான் இந்த நடமாடும் ஒப்பனை அறை பெண்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளனர். ஒரு மண்டலத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் தற்போது 15 நடமாடும் ஒப்பனை அறைகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு ஒப்பனை அறையின் மதிப்பு ரூ.29.13 லட்சம் என்னும் நிலையில், அதில் உடை மாற்ற ஓர் சிறு அறை, தாய்ப்பால் கொடுக்க ஏதுவாக ஓர் அறை உள்ளிட்டவைகளுடன் சானிட்டரி நாப்கின்னும் வைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. சுமார் 4.37 கோடி செலவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
சென்னை பெண்களுக்காகவே இந்த பிரத்யேக வாகனம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் பெண்கள் கழிவறைகளை தேடி ஓடவேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. சினிமா, டிவி சீரியல் சூட்டிங் நடைபெறும் இடங்களில்தான் இதுபோன்ற கேரவன்கள் நிறுத்தப்பட்டிருக்கும். தற்போது மகளிருக்காக சென்னை மாநகரத்தின் முக்கிய வீதிகளில் உலா வருகிறது கேரவன்கள். இந்த நடமாடும் ஒப்பனை அறைத்திட்டம் பெண்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications