ஜனவரி 28.. ஒரே நாளில் தமிழகம் வரும் பிரதமர் மோடி, ராகுல் காந்தி.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
சென்னை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 28ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே ஜனவரி 28ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி கன்னியாகுமரி வரவுள்ள நிலையில், தற்போது அதே நாளில் ராகுல் காந்தியும் வரவிருக்கிறார். இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணியில் இன்று காலை பாமக இணைந்துவிட்ட சூழலில், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதனால் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து ஜனவரி 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவிருக்கிறார். கன்னியாகுமரியில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அத்தனை தலைவர்களையும் மேடையேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. அதேபோல் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதிகளுக்கு திமுக இறங்கி வர மறுத்து வருகிறது.
இதனால் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் நீடிக்குமா அல்லது தவெகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சி 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாடு ஜனவரி 28ல் நடக்க உள்ளது.
இந்த மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஒரே நாளில் தமிழகம் வரவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. ராகுல் காந்தி வருகையின் போது திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்பின் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று பார்க்கப்படுகிறது. திமுகவின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பிப்ரவரி மாத இறுதியில் தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications