பேசிட்டே சாப்பிட்ட முதல்வர்.. பூரித்த திருக்குவளை மாணவர்கள்.. காலை உணவு திட்டத்தை துவக்கிய ஸ்டாலின்
சென்னை: முதல்வர் ஸ்டாலின், அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்தார்.. திருக்குவளையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி மறைந்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக, 2023-24 நிதியாண்டில் ரூ.404.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த அரசாணையும் வெளியாகியிருந்தது.

உணவுகள்: மதுரையில் இந்த திட்டத்தை முதல்வர் அப்போது தொடங்கி வைத்திருந்தார். முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது... இதில் காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைந்து வந்த நிலையில், மாணவர்களின் வருகைப்பதிவும் அதிகரித்தது தெரியவந்தது. அதனால்தான், இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய முதல்வர் முடிவு செய்தார்..
விரிவாக்கம்: இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 31,00 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தும் பணி தீவிரமானது.
இப்போதும், காலை உணவுத் திட்டத்தை இப்போது மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்றைய தினம், இந்த திட்டம் அடுத்தக்கட்ட விரிவாக்கத்துக்கு நகர்ந்துள்ளது. 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இன்று ஆகஸ்ட் 25ம் தேதி முதல், மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது..
மறைந்த முதல்வர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க போகிறார். இதற்கென இந்த நிதி ஆண்டில் 404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருக்குவளை பள்ளி: டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சூழலில், மறைந்த முதல்வர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில் இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.. இதைத்தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திலும் முதலமைச்சர் பங்கேற்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் அதே வேளையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அந்தந்த தொகுதியில் உள்ள பள்ளியில் நடைபெறும் காலை உணவு திட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
சபாஷ் பணிகள்: அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடை நிற்றலை தவிர்க்கவும் இந்த திட்டம் பெரிதும் துணை நிற்பதாக முதல்வர் ஸ்டாலின் பலமுறை நெகிழ்ந்து சொல்லி உள்ள நிலையில், இன்றைய காலை உணவு விரிவாக்க திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
திருக்குவளையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர், 25 பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். அவர்களுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டார் முதல்வர்.. இன்று தொடக்க நாள் என்பதால், சாம்பார், கிச்சடி, வழங்கப்பட்ட நிலையில், அதன் சுவை குறித்து மாணவ, மாணவிகளிடம் விசாரித்து கொண்டே சாப்பிட்டார்
உதயநிதி ஸ்டாலின்: உணவு எப்படி இருந்தது என்பது குறித்து சிறுவர் சிறுமிகளும், கூச்சப்படாமல் முதல்வருடன் பேசிக்கொண்டே உணவருந்தினார்கள். அதேபோல, சென்னையில் இந்த திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். சென்னை திருவல்விக்கேணி நடுநிலைப் பள்ளியில், துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உதயநிதி ஸ்டாலின் உணவருந்தினார்.












Click it and Unblock the Notifications