மார்பில் மகனை அணைத்து உயிரை விட்ட தாய்.. ஜபல்பூர் படகில் தண்ணீர் புகும்வரை லைஃப் ஜாக்கெட் தரலயாமே?
சென்னை: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த கோர படகு விபத்து, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. இயற்கை சீற்றத்தோடு மனிதர்களின் அலட்சியமும் சேர்ந்துகொண்டதால், தற்போது பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மரணத்திலும் பிரியாத ஒரு தாயின் பாசப் போராட்டம், மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களையும் அமைச்சர்களையும் கூடக் கண்ணீர் விட வைத்துள்ளது. இந்த விபத்து குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பார்கி அணையில் ஏற்பட்ட படகு விபத்தில் திருச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 நபர்கள் உட்பட 10 நபர்கள் உயிரிழந்துள்ளனர். படகில் சவாரி செய்த போது திடீரென்று படகு நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டது.. 41 பேரில் 28 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மகனை மார்போடு அணைத்த தாய்
இந்தத் துயர சம்பவத்தின் மிகக் கொடுமையான காட்சி, டெல்லியிலிருந்து சுற்றுலா வந்த ஒரு தாயும் மகனும் சடலமாக மீட்கப்பட்டபோது அரங்கேறியது.. அந்தத் தாய்க்கும் அவரது 4 வயது மகனுக்கும் சேர்த்து ஒரே ஒரு உயிர்க்கவசம் மட்டுமே ஊழியர்களால் வழங்கப்பட்டிருந்தது.
மரண பயம் சூழ்ந்த அந்த நொடியில், தன் மகனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற தவிப்பில், அந்தத் தாய் தனது உயிர்க்கவசத்திற்குள்ளேயே மகனை வைத்து இறுக அணைத்துக் கொண்டு தண்ணீரில் போராடியுள்ளார். ஆனால், அந்தப் பாசப் போராட்டமே அவர்களுக்குப் பெரிய சிக்கலாக மாறி, இருவரும் தண்ணீருக்குள் மூழ்கினர்.
விபத்து நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டபோது, உயிரிழந்த பிறகும் கூட அந்தத் தாய் தனது மகனை நெஞ்சோடு அணைத்தபடியே இருந்தார். மகனுக்குத் தனி உயிர்க்கவசம் வழங்கப்பட்டிருந்தால், அந்தப் பிஞ்சு உயிர் தப்பித்திருக்கும் என்ற உண்மை காண்போரைச் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
வானிலை படுமோசம்
மாலை 6 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் அலைகள் கொந்தளிப்பாகி உள்ளது.. இதனால் படகு நிலைதடுமாறியது. வானிலை லேசாக மோசமடைந்தால்கூட யாரும் படகுகளை இயக்க மாட்டார்கள். ஆனால், அன்றைய தினம் வானிலை மோசமாக இருந்தும்கூட படகு இயக்கப்பட்டுள்ளது..
அதிலும் படகு செல்ல செல்ல வானிலை மேலும் மேலும் மோசமாகி உள்ளது.. அப்போது கரைக்கு போய்விடலாம் என்று அங்கிருந்த பயணிகள் சொன்னார்களாம்.. எனினும் ஊழியர்கள் அதை அலட்சியம் செய்ததுடன், படகையும் தொடர்ந்து செலுத்தியுள்ளனர்.
லைஃப் ஜாக்கெட் தரல
இந்த படகு கவிழ்வதற்கு சற்று முன்பு எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகி காண்போரை நிலைகுலைய வைத்து வருகிறது.. அந்த வீடியோக்களில், பயணிகள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது.
அப்போது வானிலை மோசமடைந்து பலத்த காற்று வீசுவதையும் காண முடிகிறது.. அதுமட்டுமல்ல, ஒரு பயணி கூட உயிர்க்கவசம் அணிந்திருக்கவில்லை. படகு நிலைதடுமாறி உள்ளே தண்ணீர் புக தொடங்கிய பின்னரே, அங்கிருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக உயிர்க்கவசங்களை வழங்கினார்களாம். லைப் ஜாக்கெட் அப்போதே தந்திருந்தால், உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என்றும், தாமதமாக வழங்கப்பட்டதுதான் விபத்துக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும், சரியான நேரத்தில் உயிர் காக்கும் கவசங்கள் வழங்கப்படவில்லை என்றும் படகில் இருந்தவர்களில் சிலர் அளித்துள்ள தகவல் அதிர்ச்சியை அதிகரிக்க செய்துள்ளது.
6 வயது சிறுவன் உடல் மீட்பு
விபத்து நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு, அதாவது இன்று மாலை 6 வயது சிறுவன் விராஜ் சோனியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. இன்னும் 3 சுற்றுலாப் பயணிகளைத் தேடும் பணி 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 200 மீட்புப் பணியாளர்கள், ஆக்ராவிலிருந்து வரவழைக்கப்பட்ட 20 ராணுவ வீரர்கள், NDRF மற்றும் SDRF படையினர் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களில் கம்ராஜ், அவரது 5 வயது மகன் தமிழ் மற்றும் தென்னிந்தியாவை சேர்ந்த மயுரம் ஆகியோரையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மீட்பு பணி தீவிரம்
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, படகின் ஊழியர்கள் 3 பேரை பணிநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் சுற்றுலாப் படகுகளை இயக்கத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். ஊழியர்களின் அஜாக்கிரதை மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications