சென்னையில் மருமகன் வீட்டில் தங்கம் திருடிய மாமியார்.. உலக மகா நடிப்பு.. நாடகத்தால் ஆடிப்போன போலீஸ்
சென்னை: சென்னை போரூரில் மகனின் செலவுக்கும், ஆன்லைன் சூதாட்டத்துக்காகவும் மகள் மற்றும் மருமகனின் நகையை அடகு வைத்துவிட்டு கொள்ளை போனதாக நாடகமாடிய பெண், போலீசாரின் தீவிர விசாரணையில் கையும் களவுமாக சிக்கி உள்ளார். திருடி அடகுவைத்துவிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக பெண் நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம், தர்மராஜா நகர் பகுதியை சேர்ந்த 50 வயதாகும் சாந்தி , தனது மகள் சந்தான லட்சுமி (28), மருமகன் சிவமுருகன் (30) ஆகியோருடன் அந்த பகுதியில் உள்ள மூன்று மாடிகள் கொண்ட வீட்டில் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அன்று சாந்தி, அவரது மகள், மருமகன் ஆகியோர் சாப்பிட்டுவிட்டு வழக்கம் போல் தூங்க சென்றுவிட்டார்கள்.

நேற்று அதிகாலையில் சிவமுருகன் தனது அறையிலிருந்து எழுந்து வந்த போது, மாமியார் சாந்தியின் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது மாமியார் சாந்தியை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிவமுருகன் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மயக்கம் தெளிந்த சாந்தியிடம் விசாரித்தபோது, மர்மநபர்கள் முகத்தில் மயக்க 'ஸ்பிரே' அடித்ததுடன், தனது கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை வளசரவாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் யார் என்பதை அறிந்து கைது செய்ய முடிவு செய்த போலீசார், அதற்காக தீவிர விசாரணை நடத்தினார்கள். மறுபுறம் கொள்ளையர்களை பிடிக்க உதவி கமிஷனர் கருணாகரன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்கள்.
இதனிடையே சாந்தி சொன்னபடி மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றதற்கான எந்த தடயமும் சிக்கவில்லை. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து வீட்டில் உள்ளவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரித்தனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்ட தகவல்களை கூறினார்கள். இப்படி முண்ணுக்கு பின் முரணாக பேசியதால், போலீசாருக்கு வீட்டில் உள்ளவர்கள் மீது சந்தேகம் அதிகரித்தது. பின்னர் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, அதிகப்படியான தங்க நகைகள் அடகு வைத்திருப்பதற்கான ரசீது ஒன்று சிக்கியது. மேலும் நகை அடகு கடையில் இருந்து சாந்தியின் செல்போனுக்கு வட்டி கட்டுவது குறித்து குறுந்தகவலும் வந்திருந்தது.
இதையடுத்து சாந்தி தான் நாடகமாடுகிறார் என்பதை புரிந்து கொண்ட போலீசார், மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் சாந்தியிடம் விசாரித்த போது, நகைகளை அடகு வைத்துவிட்டு, கொள்ளை போனதாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். இதுபற்றி போலீசாரிடம் சாந்தி வாக்குமூலமும் அளித்தார். இதுபற்றி போலீசார் கூறுகையில், சாந்தியின் மகள் லட்சுமியின் அறை சிறியது என்பதால் நகைகள் இருந்த பீரோவை, அம்மாவின் அறையில் வைத்து இருக்கிறார் லட்சுமி. அதில் இருந்த தனது மகளின் நகைகள் மற்றும் எனது நகைகளை மகனின் செலவுக்காக அடகு வைத்து உள்ளார் சாந்தி. மேலும் சாந்தியும் ஆன்லைன் சூதாட்டத்துக்காக நகையை அடகு வைத்து அதில் கிடைத்த பணத்தை இழந்துள்ளார். வருகிற செப்டம்பர் 5-ந்தேதி மகள் லட்சுமி ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதால் பீரோவில் உள்ள நகைகளை எடுக்க வரும்போது மாட்டிக்கொள்வேன் என்பதை உணர்ந்த சாந்தி , நகைகள் திருட்டு போனதாக நாடகமாட திட்டமிட்டுள்ளார்.
அதன்படி அதிகாலை 4 மணிக்கு எழுந்த சாந்தி, சர்க்கரை நோய்க்காக சாப்பிட்டு வந்த மாத்திரைகளை கூடுதலாக சாப்பிட்டுள்ளார். மேலும் துணியால் தனது கை, கால்களை தானே கட்டி, வாயிலும் துணியை திணித்துள்ளார். இதில் மயங்கி கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவர்களிடம் மர்மநபர்கள், வீடு புகுந்து தன்னை கட்டிப்போட்டு விட்டு நகையை கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடி உள்ளார். ஆனால் நகை அடகு வைத்த ரசீதுகளால் போலீசாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார். இவ்வாறு சாந்தி அளித்த வாக்குமூலம் குறித்த தகவலை போலீசார் தெரிவித்தனர். இதனிடையே நகைகளை அடகு வைத்துவிட்டு, கொள்ளை போனதாக நாடகமாடிய சாந்தி மீது வழக்குப்பதிவு செய்ய வளசரவாக்கம் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். மருமகன் வீட்டில் தங்க நகைகளை திருடி அடகு வைத்து விட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக மாமியார் நாடகமாடிய சம்பவம் சென்னை போரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications