ஏமாந்த சிவகார்த்திகேயன்! சென்னை ஹைகோர்ட்டில் ஞானவேல் ராஜா மீது புதிய வழக்கு.. சிக்கல் மேல் சிக்கல்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‛மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்துக்கு அவருக்கு பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தை சொன்னபடி முழுமையாக வழங்காமல் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சம்பள நிலுவை தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை அவரது தயாரிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கான முதலீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‛மிஸ்டர் லோக்கல்'. இந்த திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டில் வெளியானது.
இந்த திரைப்படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்கினார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தது.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால் ரூ.11 கோடி வரை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வழங்கி உள்ளார். மீதமுள்ள சம்பளத்தை அவர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சிவகார்த்திகேயன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது இருதரப்பினரும் சமரசம் செய்து கொள்வதாக கூறினார். இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனாலும் கூட சொன்னபடி ஞானேவேல் ராஜா, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நிலுவை சம்பளத்தை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இன்னும் ‛பெண்டிங்' உள்ளதாம்.
அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்ட ரூ.11 கோடிக்கான டிசிஎஸ் தொகையை ஞானவேல் ராஜா வழங்கவில்லை. இதனால் வருமான வரித்துறை சிவகார்த்திகேயனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.91 லட்சத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் தான் சிவகார்த்திகேயன் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. . இதைத் தொடர்ந்தே அவர் தற்போதைய வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‛‛தனது நிலுவை சம்பளம் கிடைக்கும் வரை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் தற்போதைய திரைப்படங்களான'ரெபெல்,' 'சியான் 61,' மற்றும் 'பத்து தல' ஆகியவற்றில் முதலீடு செய்ய தடை விதிக்க வேண்டும்.
அதேபோல் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை அப்படங்களின் ஓடிடி தளங்களுக்கான விற்பனை உரிமம், திரையரங்கம் விநியோகஸ்தர்கள் சார்ந்த பணிகளையும் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வரும்படி பட்டியலிடப்பட்டுள்து. இந்த மனுவை நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தர் விசாரிக்க உள்ளார். இதனால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications