இன்று 44 ரயில் கேன்சலானால் என்ன? நாங்க இருக்கோமே! கை கொடுத்த எம்டிசி! கூடுதலாக 150 பஸ்கள் இயக்கம்
சென்னை: சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் இன்று கூடுதலாக 150 பேருந்துகளை இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
சென்னையில் பொது போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். சென்னையில் பல்லாயிரக்கணக்கானோர் வேலைக்கு சென்று வர, வியாபாரிகள் விற்பனை செய்ய, பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வர என பலதரப்பட்டோருக்கு ரயில் சேவை பெரும் உதவியாக இருந்து வருகிறது.

இப்படி இவர்களுக்கு தங்கு தடையின்றி ரயில் சேவை கிடைக்க வேண்டும் என்றால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் இன்று காலை 10 மணி முதல் இரவு 10.30 மணி வரை சென்னை கடற்கரை டூ தாம்பரம் வரை இயங்கும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் செல்லும் 44 ரயில்களும் ரத்தாகிறது. கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி காரணமாக இவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து காலை 10:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. அது போல் தாம்பரத்திலிருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4:30 மணி வரை சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார மின்சார ரயில்களும், சென்னை கடற்கரை - அரக்கோணம் ரயில்கள், காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை ரயில்கள், திருமால்பூர்- சென்னை கடற்கரை ரயில்கள் என மொத்தம் 44 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இதனால் பயணிகள் சிரமத்தை போக்க மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் வழித்தடத்தில் சென்னை மாநகர போக்குவரத்து சார்பில் கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது.
அதில் கூறியிப்பதாவது, பிராட்வே-தாம்பரம் வழித்தடத்தில் 60 கூடுதல் பேருந்துகளும், பிராட்வே வழி திநகர், எழும்பூர்-தாம்பரம் வரை 20 கூடுதல் பேருந்துகளும், கிண்டி- கிளாம்பாக்கத்திற்கு 10 கூடுதல் பேருந்துகளும், கொருக்குப்பேட்டை-தாம்பரத்திற்கு 30 கூடுதல் பேருந்துகளும், பிராட்வே- கூடுவாஞ்சேரிக்கு 20 கூடுதல் பேருந்துகளும், தியாகராய நகர்-கூடுவாஞ்சேரி வரை 10 கூடுதல் பேருந்துகளும் மொத்தமாக 150 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் விடுமுறை என்றாலும் அந்த நாளில் மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி பொழுதுபோக்கும் இடங்களுக்கும் கோயில்களும், கடற்கரைக்கும் செல்வதுண்டு. அவர்களுக்காக இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications