விடை கொடுக்க போகும் கோயம்பேடு.. இனி முடிச்சூர் தான்.. தீபாவளிக்கு பிறகு பெரிய மாற்றம் உறுதி
சென்னை: முடிச்சூரில் 150 பஸ்கள் நிறுத்தும் ஆம்னி பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) அமைச்சரும், இந்து அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு கூறினார். தீபாவளிக்கு பிறகு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ஆம்னி பேருந்துகள் போகாது என்றே தெரிகிறது. இனி போரூர் டோல்கேட்டிலோ அல்லது மதுரவாயல் அல்லது கோயம்பேட்டிலேயே மக்கள் ஆம்னி பேருந்துகளில் ஏற முடியாத நிலை ஏற்படும்.
சென்னையின் புறநகர் பகுதியான செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஓராண்டாக செயல்பாட்டில் இருக்கிறது. இங்கு தென்மாவட்டங்கள் செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, நெல்லை, சேலம், கோவை, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதாவது 90 சதவீத தமிழ்நாட்டிற்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போதைய நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை, காஞ்சீபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் மாதவரத்தில் இருந்து திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்களும் இயக்கப்படுகின்றன.
ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை சென்னையில் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு, மதுரவாயல், போரூர் சுங்கச்சாவடி வழியாக நேரடியாக பெருங்களத்தூர் வழியாக கிளாம்பாக்கம் வருகின்றன. சில பேருந்துகள் வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக நேரடியாக கிளாம்பாக்கமே வருகின்றன. இப்படித்தான் இப்போது பேருந்துகள் சென்று வருகின்றன. ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு வரை சென்று வருவதால் பலரும் ஆம்னி பேருந்துகளை விரும்புகிறார்கள். அதேநேரம் ஆம்னி பேருந்துகளையும் கிளாம்பாக்கத்தில் இருந்தே செல்ல வைக்க அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளது. இதன்படி முடிச்சூரில் 150 பஸ்கள் நிறுத்தும் ஆம்னி பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரப்போகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே 16 ஏக்கர் பரப்பளவில் ரூ.15 கோடியே 20 லட்சம் செலவில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள காலநிலை பூங்காவையும், முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.42 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ள ஆம்னி பஸ்கள் நிறுத்துவதற்கான இடத்தையும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தலைவருமான சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தனர்.
ஒரே நேரத்தில் 150 பஸ்கள் நிற்க கூடிய அளவுக்கு ஆம்னி பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தீபாவளிக்கு பிறகு அந்த ஆம்னி பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ஆம்னி பேருந்து நிலையம் முடிச்சூரில் பயன்பாட்டிற்கு வந்தால் இனி கோயம்பேட்டிற்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications