தமிழகத்தில் தள்ளுவண்டி வியாபாரி கூட அரசியலை அலசுவார்.. அண்ணாமலைதான் அரைகால்வேக்காடு- முரசொலி விளாசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவோடு கூட்டணி வைக்க திமுகவுக்கு தகுதி இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு முரசொலி நாளேடு கடுமையாக விமர்சித்துள்ளது.

Recommended Video

    Stalinக்கு முன்னாடியே Modi வேட்டி கட்டிட்டார் -ஸ்டாலினை விளாசிய Annamalai *Politics

    இதுகுறித்து முரசொலி நாளிதழில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

    தமிழக அரசியலை பற்றி அதன் தலையும் வாலும் தெரியாத கத்துக்குட்டியை பாஜக அந்த கட்சியின் தலைவராக்கியுள்ளது. ஐபிஎஸ் ஆக உள்ள அந்த நபருக்கு இதெல்லாம் தெரியாது இருக்குமா, என பலர் ஆச்சரியப்படலாம்! இந்த கத்துக்குட்டி அரசியல்வாதி குறித்து "உளறிக் கொட்டும் ஆட்டுக்குட்டி" என்று தலைப்போடு சங்கி செய்திகள் எனும் பேரில் ஒரு வீடியோ பதிவு சில மாதங்களுக்கு முன் சமூகவலைதங்களில் வெகுவாகப் பரவியது! அதனை பார்த்து பலரும் இந்த நபரின் அரசியல் அறிவு கண்டு உடலில் உள்ள பொறிகள் அனைத்தாலும் சிரித்தார்கள். அப்படிச் சிரிக்குமளவு இந்த அரசியல் அரைக்கால் வேக்காட்டுப் பேர்வழியை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்து உதறி எறிந்திருந்தது அந்த வீடியோ பதிவு! அப்படி என்ன அந்த வீடியோ பதிவில் இருந்தது என்று அதனை பார்க்காதவர்கள் தெரிந்து கொள்ளத் துடிப்பது புரிகிறது. இதோ அந்த வீடியோ காட்சிகள் பாருங்கள்!

    காக்கி உடை

    காக்கி உடை

    காக்கி உடை அணிந்து உயர் போலீஸ் அதிகாரியாக கர்நாடகா மாநிலத்தில் பணிபுரிந்தபோது ஒரு விழாவில் பேசுகிறார், அவர் பேசிய அந்த பேச்சைக் கேளுங்கள். " வரலாற்று விஷயங்களை தப்புத் தப்பாகக் கூறிடும் இவரெலாம் எப்படி ஐபிஎஸ் அதிகாரி ஆனார்?" என கேள்வி எழுப்புகிறார் வருணனையாளர்! அந்த நிகழ்ச்சியில் இன்றைய தமிழக பாஜக தலைவர் கன்னடத்தில் தமிழக மதிய உணவுத் திட்டத்தைப் பற்றி தனது வாய்க்கு வந்தவாறு அளந்து விடுகிறார். "தமிழ்நாடு நல்லி, இந்த மிட்டே மீல், பர்ஸ் இன் தி வேர்ல்ட், 1969 நல்லி" என கன்னடமும் ஆங்கிலமும் கலந்து அந்த விழாவில் கதை அளந்து விடுகிறார்.

    முதல்வர்

    முதல்வர்

    அதாவது, "1969 இல் தமிழக முதல்வராக இருந்த காமராசர்தான், மதிய உணவுத் திட்டத்தை உலகத்திலேயே முதல்முறையாக கொண்டு வந்தார்" என பேசுகிறார். அது மட்டுமல்ல, அந்த காலகட்டத்தில் கல்வி அமைச்சராக கக்கன் இருந்தார் என்றும் அந்தப் பேச்சிலே குறிப்பிடுகிறார். 1963 லிருந்து 1975 ஆம் ஆண்டு வரை காமராசர் தமிழகத்தில் முதல்வராக இருந்ததாக நாம் படித்த வரலாற்றில் இல்லை , வருணனையாளரும் இதை விளக்குகிறார். பெருந்தலைவர் காமராசர், முதலில் 1957 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1962 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை தான் முதல்வராக இருந்துள்ளார். அது மட்டுமல்லாமல் கக்கன் அவர்கள் உள்துறை, வேளாண்மைத் துறை, பொதுத் துறை அமைச்சராக இருந்துள்ளாரே தவிர, ஒரு முறை கூட கல்வித் துறை அமைச்சராக இருந்ததில்லை! இப்படி எல்லாம் தமிழக வரலாறு குறித்து அரைகுறை அறிவுகூட இல்லாது பேசிடும் பேர்வழியை, தமிழக தலைவராக பிஜேபி நியமித்தது!

    தெரிந்த மேதை

    தெரிந்த மேதை

    இவர், எல்லாம் தெரிந்த மேதை போல கர்நாடக மக்களிடம் அளந்து விட்டார். அந்த பருப்பு தமிழகத்தில் வேகாது என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார். பல ஆண்டுகள் கர்நாடகத்தில் குப்பை கொட்டி விட்டுத் திரும்பிய நிலையில் "தம்பி ஊருக்குப் புதுசு" என்பதால் தமிழக மக்களின் அரசியல் தெளிவை அவர் அறிந்திருக்க நியாயமில்லை! இங்கே தள்ளுவண்டி வைத்து வியாபாரம் செய்பவர்கள் கூட அரசியலை அக்குவேறு ஆணிவேறாக அலசிடும் ஆற்றல் மிக்கவர்கள்! அதனால்தான் பாஜக ஜன சங்கமாக இருந்த காலந்தொட்டு எத்தனையோ பகீரதப் பிரயத்தனங்கள் செய்து பார்த்தும், தமிழகத்தில் தலை எடுக்க முடியவில்லை. தனது இருப்பைக் காட்டிக் கொள்ள அறிக்கைகள் விடுவது, செய்தியாளர்களை சந்திப்பது என்று "மூன்றாம் பிறை" திரைப்படத்தில் சுயநினைவு இழ்நது பின்னர் நினைவு திரும்பிய நிலையில் ஸ்ரீதேவி தான் சுயநினைவு இழந்த காலகட்டத்தில் அவரது வாழ்வில் நடந்ததை மறந்து செல்லும் போது தான் யார் என்பதை நினைவூட்ட பல ஷேஷ்டைகளைச் செய்து கமல் காண்பிப்பாரே! அதைப் போல தனது இருப்பைக் காட்டிட பல கோணங்கித் தனங்களைச் செய்து கொண்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர்.

    முற்போக்கு சிந்தனை

    முற்போக்கு சிந்தனை

    மிகவும் முற்போக்குச் சிந்தனை கொண்டதாகவும் சமூகநீதி மண் என்றும் கூறிக் கொள்ளும் தமிழகத்தில் ஒரு சில ஊராட்சித் தலைவர்களுக்கு சுதந்திர தினத்தன்று கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்படுகிறது- என்று ஒரு செய்தி ஏடுகளில் வெளி வருகிறது! அந்தச் செய்தி வந்தவுடனேயே அப்படி இருப்பின் அந்த நிலை உடனடியாகக் களையப்பட வேண்டும் என்று ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதற்கு தடையிருப்பின் அதனைத் தகர்த்தெறிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்திய அறிக்கை மறுநாள் செய்தித் தாள்களில் வெளி வருகிறது. இதையெல்லாம் படிக்காது திமுக ஆட்சியில் சமூகநீதி என்பது பெயரளவில்தான் உள்ளது என்று அறிக்கைவிட்டு மூன்றாம் பிறை கமல்ஹாசன் போல் தனது இருப்பைக் காட்டிக் கொள்ள குரங்காட்டம் ஆடியுள்ளார் தமிழக பாஜக தலைவர்.

    சனாதன தர்மம்

    சனாதன தர்மம்

    ஆண்டாண்டு காலமாக சனாதன தர்மம் என்ற பெயரில் சமூக நீதியை குழி தோண்டி புதைத்து ஆடுகளை மோத விட்டு ரத்தம் குடித்த நரி போல, குளித்து வந்த கூட்டத்திலிருந்து ,அதனை மீட்டெடுக்க சுயமரியாதை உணர்வோடு திராவிட இயக்கம் எடுத்த முயற்சிகளையும் , அதில் கண்ட வெற்றி நிகழ்வுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது . மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கீரிப்பட்டி நாட்டார்மங்கலம் கிராமங்களின் ஊராட்சிகளில் பல ஆண்டு காலமாக தேர்தல் நடத்த முடியாத நிலை! சமூகநீதிக்கு எதிராக நடைபெற்ற அந்தத் தாக்குதலை முறியடித்தது திமுக ஆட்சி. 2006ஆம் ஆண்டு தமிழக முதல்வராக கருணாநிதி இரு்நத காலகட்டம் ! பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் கிராமங்களில் எப்படியாவது தேர்தல் நடந்தே தீர வேண்டும் என முடிவெடுத்தார். அன்றைய தினம் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் இன்றைய முதல்வர் ஸ்டாலின். சமூக நீதி உருவாகியே தீர வேண்டும் என்ற வைராக்யத்தோடு அரசியல் களத்தில் புகு்நது அண்ணாவுடன் இணைந்து போரிட்ட கருணாநிதி முதல்வராக இருந்த போது அந்த மூன்று கிராமங்களிலும் தேர்தல் நடத்தியே தீர வேண்டும் என உறுதியேற்று, அதற்கான பொறுப்பை உள்ளாட்சி அமைச்சர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்!

    கட்டளை

    கட்டளை

    தலைவன் இட்ட கட்டளையை தலைமேல் தாங்கி களத்தில் இறங்கிய ஸ்டாலின் அந்த பணியை வெற்றிகரமாக முடித்தார்! அவர் தனது பணியைச் செவ்வனே முடிக்க அன்று தனக்கு வலிவூட்ட தேர்ந்தெடுத்த அதிகாரி உதயசந்திரன்! மதுரை மாவட்ட ஆட்சியராக அவர் நியமிக்கப்பட்டு அவரது துணையுடன் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளில் தேர்தல் நடத்தி முடித்தார். பல ஆண்டுகாலமாக ஒரு சில ஊராட்சிகளில் தேர்தல் நடத்தாமல் இருக்கும் சூழலைத் தடுத்து நிறுத்த வேண்டும்- என்று உறுதியுடன் முதல்வர் கருணாநிதியின் எண்ணத்தை நிறைவேற்றிக் காட்டினார். அரசியல் கத்துக்குட்டிக்கு வரலாறுகள் எல்லாம் தெரிவதற்கு நியாயம் இல்லை. சமூகநீதியைச் சாய்க்க எண்ணும் கூட்டம் கோடாரிக் காம்பாகப் பயன்படுத்திடும் இத்தகைய பேர்வழிகள், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதறியாது வாலறுந்த பல்லிகளின் வால் துடிப்பது போலத் துடிக்கிறார்கள். அதன் உச்ச துடிப்புதான் கடந்த 50 ஆண்டு கால கட்டத்தில் எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு திமுக ஆட்சி சிலை வைத்திருக்கிறது என்பது போன்ற வரலாற்று அறிவும் தெளிவும் இல்லாத கேள்விகள்!

    தகுதி இல்லை

    தகுதி இல்லை


    முரசொலி தலையங்கம் அந்த அரைக்கால் வேக்காட்டு அரசியல்வாதிக்கு மரமண்டையில் உரைக்கும் வகையில் கழக ஆட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலரையும் கௌரவித்திட எழுப்பப்பட்ட சிலைகள் மணிமண்டபங்கள் மற்றும் நினைவாலயங்களில் பட்டியலிட்டு காட்டியுள்ளது. ஒரு செய்தியாளர் சந்திப்பில் எந்த காரணத்தோடும் பிஜேபியோடு கூட்டணி வைக்க திமுகவுக்கு தகுதி கிடையாது. திமுகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி சேர மாட்டோம் என்று இந்த பிரகஸ்பதி கூறியுள்ளது. பாரதிய ஜனதா திமுகவுடன் கூட்டணி வேண்டி தனது அடிப்படைக் கொள்கைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, குறைந்தபட்ச செயல்திட்டத்தோடு திமுகவுடன் கூட்டணி வைத்த வரலாற்றுக் கூட தெரியாமல் உளறி கொட்டும் இந்த உலர்வாயை எந்த கணக்கில் சேர்ப்பது? அவர் ஒரு அரைக்கால் வேக்காடு என்று கருதி இருந்தோம் .அதற்கு கூட தகுதி இல்லை என்று அடிக்கடி தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள் ; எத்தனை சூடு போட்டாலும் திருந்தாத இத்தகைய ஜென்மங்களை எந்த வகையில் சேர்ப்பதோ?

    இவ்வாறு முரசொலியில் கட்டுரை தீட்டப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+