Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திரா நகரில் நடந்த கொலை? வீடு தேடி வந்த பாரதிராஜா! ராதிகாவின் 46 வருட சினிமா வாழ்க்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் ராதிகா நடிக்க தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி அவர், தனது முதல் திரைப்படமான 'கிழக்கே போகும் ரயில்' பற்றியும் இயக்குநர் பாரதிராஜா பற்றியும் பல மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகை ராதிகா நடிக்க வந்து 46 ஆண்டுகள் முடிந்துள்ளது. இவரை பாரதிராஜா 'கிழக்கே போகும் ரயில்' மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் 1978 இல் திரைக்கு வந்தது. சினிமா வாசனையே இல்லாமல் வளர்ந்தவர் ராதிகா. அவரது அப்பா எம்.ஆர்.ராதா தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகர். அவருக்கு என்று உலகம் முழுக்க தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. மேலும் அவர் திராவிட இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தவர்.

radikaa sarathkumar

எம்.ஜிஆரை துப்பாக்கியால் சுட்ட பிறகு அவரது புகழ் மேலும் உலகம் முழுக்கப் பரவிவிட்டது. அவரின் மகளான ராதிகா தனது இளமைப் பருவத்தில் சினிமாவே பார்த்ததில்லை என்கிறார். அவர் லண்டனில் படித்தவர். அவரை எப்படி பாரதிராஜா கண்டுபிடித்து நடிக்க வைத்தார் என்பதே ஒரு மேஜிக்தான். அந்த நினைவுகளை ராதிகா இப்போது அசைபோட்டுப் பேசி இருக்கிறார்.

ராதிகா பேசும்போது, "நான் சினிமா உலகத்திற்கு நடிக்க வந்து 46 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதால் ஒரு விழா எடுக்க வேண்டும் என்றார்கள். நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் நடிக்க வந்தேன். என் வேலையை நன்றாகச் செய்தேன். என் பெஸ்ட் என்னவோ அதைக் கொடுத்தேன். சினிமா ரசிகர்களால்தான் இந்த உயரத்திற்கு வந்தேன். 46 ஆண்டுகளாக இருக்கிறேன். இனிமேலும் இருப்பேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத கேரக்டர் 'பாஞ்சாலி'. இன்றைக்கு என்ன தூக்கத்தில் தட்டிக் கேட்டால் கூட எந்த சீனில் எப்படி நடித்தேன்? என்ன பேசினேன் என்று சரியாகச் சொல்வேன். பாஞ்சாலி கதாபாத்திரம் தான் என் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது.

பாரதிராஜா வேறு யாரையோ பார்க்க ஒரு வீட்டுக்கு வந்தார். அங்கே என் போட்டோவை பார்த்தார். உடனே அவர், 'யார் இந்தப் பெண்?’ என்று கேட்டிருக்கிறார். அவர்கள் பக்கத்து வீட்டுப் பெண் என்று சொல்லி இருக்கிறார்கள். அவர் என் வீட்டுக்கு வரும்போது நான் செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தேன். அவர் எங்கள் வீட்டுக்கு வந்த சில நாட்களுக்கு முன்னால்தான் இந்திரா நகரில் கொலை ஒன்று நடந்திருந்தது. எனவே ஏரியா மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். புதிய ஆட்கள் வந்தால் தகவல் தர வேண்டும் என போலீஸ்காரர்கள் சொல்லி இருந்தார்கள்.

அப்படியான ஒரு காலகட்டத்தில் முன்பின் அறிமுகம் இல்லாத பாரதிராஜா எங்கள் வீட்டுக்கு வந்தார். பயந்து போய் இருந்த நான் அவரை வீட்டுக்குள்ளாகவே விடவில்லை. அவர், 'நான் பாரதிராஜா. டைரக்டர்' என்று சொன்னார். அப்போது '16 வயதினிலே' ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அவர் வந்தது முதல் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தார். நான் என் அம்மாவிடம், 'Why is this man looking at me? I don't like it' என்று சொன்னேன்.

அவர் பாவாடை தாவணி இருக்கா என்று கேட்டார். நான் பாவாடை தாவணியே கட்டியதில்லை என்று சொன்னேன். அப்போதுதான் என் அப்பாவைப் பார்க்க லண்டனிலிருந்து நான் வந்திருந்தேன். பாரதிராஜா நான் தான் நடிக்க வேண்டும் என்று சொன்னார். அதன்பின்னர் தான் எம்.ஆர்.ராதா மகள்தான் நான் என்பது அவருக்குத் தெரிந்தது. என் அப்பாவிடம் பயந்துகொண்டே போய் அனுமதி கேட்டர். அவர் முற்போக்குவாதி. உடனே தாராளமாக நடிக்கட்டுமே என்று அவர் சொல்லிவிட்டார். கடைசியில், 'ராதிகாவை நடிக்க வைக்கப் போறீங்க?' என்று கேட்டார்.

நான் சினிமாவே பார்த்தது கிடையாது. ஒவ்வொரு நாள் ஒரு கனவிலிருந்த வயது. ஒரு நாள் ஏர்ஹோஸ்டர். ஒரு நாள் டாக்டர். ஒரு நாள் லாயர் என மாற்றி மாற்றி கனவு கொண்டு இருந்தேன். சினிமா என் கனவில் இல்லவே இல்லை. நான் ஷூட்டிங் ஸ்பாட் போய் இறங்கிய போது யாருமே என்னை ஒரு ஹீரோயின் என்பதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. அப்படித்தான் 'கிழக்கே போகும் ரயில்' பாஞ்சாலி கதாபாத்திரம் ஆரம்பமானது.

எனக்கு பாக்யராஜ் தான் டயலாக் சொல்லிக் கொடுப்பார். அவருக்கும் எனக்கு அடிக்கடி சண்டை வரும். அவரை இங்கிலீஷில் நான் திட்டிவிடுவேன். அவருக்கு அது புரியாது. அதன் பிறகு நானே போய் அவரை சமாதானம் செய்வேன். 'என்ன ராஜா என் மேல கோபமா?' என்பேன். 'நீ இங்கிஷ்லதானே திட்டினேன். எனக்குப் புரியவே இல்லை. அதனால் கோபம் வரல' என்பார். அவர் பெயர் அப்போது ராஜாதான்.

முதல் படத்தில் நடிக்கும் போது என்னை ராணி மாதிரி பாரதிராஜா கவனித்துக் கொண்டார். சாக்லெட் கொடுத்துத்தான் என்னை நடிக்க வைப்பார்கள். அவர் படத்தில் நடிக்கும் போது சொந்த வீட்டில் இருப்பதைப் போல உணர்ந்தேன். வேறு வேறு கம்பெனி மாறி மூன்றாவது படம் நடிக்கும் போதே எனக்குள் பயம் வந்தது. எம்.ஆர்.ராதா மகள் என்பதால் யாரும் என்னை நெருங்க மாட்டார்கள். என்னைச் சரியாக வழிநடத்தி நடிக்க வைத்தது என் அம்மாதான்.

பாரதிராஜா ஒரு பாறைக்கு நடுவே கிளியை எடுத்துக் கொண்டு ஓடி வருவேன். 'கிழக்கே போகும் ரயிலில்' எடுத்த முதல் ஷாட் அதுதான். என்னை மான் மாதிரி ஓடிவர வேண்டும் என்று பாரதிராஜா சொன்னார். எனக்கு மான் எப்படி ஓடி வரும் என்றே தெரியாது. எனக்குச் செய்யத் தெரியவில்லை. அதேபோல் நான் ஹீரோவை சந்திக்கும் காட்சியைப் பழனி மலையில் எடுத்தோம். நான் மலை மேலே நடந்துபோய், உயரே இருந்து ஹீரோவை பார்க்க வேண்டும். நடந்து போகும் போது கீழே பாரதிராஜா பாறையில் தன் தலையை வைத்து முட்டிக் கொண்டிருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

உடனே அவரிடம் 'ஏன் தலையைப் பாறையில் முடிக்கிறீங்க?' என்றேன். அவர் சீன் சரியாக வரவில்லை என்ற கோபத்திலிருந்தார். உடனே பொங்கிவிட்டார். எனக்கு அவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டுவிட்டது. ஸ்பாட்டில் பலரும் ஒரு மாதிரி ஏளனமாகப் பார்க்கிறார்கள். உடனே நான், 'நான் ஊர்க்குப் போகிறேன். எனக்கு நடிக்கப் பிடிக்கவில்லை' என்று சொல்லிவிட்டேன். அந்த மனநிலையை அம்மாதான் மாற்றினார். என்னை உற்சாகப்படுத்தியவர் பாரதிராஜாதான்" என்று பல நினைவு அலைகளை மீண்டும் சுழல விட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+