40 தொகுதிகளிலும் போட்டியிட ஆசை! ஆனால் என்ன..? மனசுக்குள் மூடி வைக்காத முத்தரசன்!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிட தங்களுக்கு ஆசையிருப்பதாக கூறியிருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்.
ஆசைப்பட யாருக்குத் தான் உரிமையில்லை, தாராளமாக முத்தரசன் ஆசைப்படட்டும் எனச் சிரித்துக் கொள்கிறது திமுக தரப்பு. ஆனால் நடைமுறை என்று வரும் போது தானே தெரியும் அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள். திமுகவிடம் கடந்த முறை வாங்கிய தொகுதிகளை விட கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் கேட்போம் என்றும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதியில் போட்டியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் தோழர்கள் விரும்புவதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை திமுக தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் எனத் தெரிகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூர், நாகை ஆகிய 2 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வசம் ஒதுக்கியது திமுக. இந்த முறை 2 தொகுதிகள் ப்ளஸ் கூடுதலாக 1 தொகுதியை கேட்டு வங்க இந்திய கம்யூனிஸ்ட் முயற்சித்து வருகிறது.
ஆனால் திமுக தொகுதி பங்கீட்டு குழுவோ 1 சீட் தான் என்கிற நிபந்தனையில் பேச்சுவார்த்தையை தொடங்கும் திட்டத்தில் உள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போது காரசாரமான விவாதங்கள் எழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை போலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவிடம் 3 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியையே 6 சீட், 7 சீட் என திமுக தொகுதி பங்கீட்டு குழு தண்ணீர் குடிக்க வைத்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் 1 சீட் என்கிற விதத்தில் தான் திமுக பேசவே ஆரம்பிக்கும். போட்டி சற்று கடுமையாக இருக்கும் எனக் கருதுவதால், முடிந்த வரை அதிகமான தொகுதிகளில் திமுக களம் காண விரும்புகிறது.












Click it and Unblock the Notifications