பாம்பு பிடிக்க வந்த "நாகம்".. ஆனால் நாகமே மூச்சுத்திணறி நின்ற சம்பவம்.. குழம்பி நிற்கும் மக்கள்
சென்னை: சமீப காலமாகவே குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள் புகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பாம்புகள் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவேதான் இதற்கெல்லாம் தீர்வாக அரசு ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டது.. ஆனால், அங்கேயும் ஒரு சிக்கல் முளைத்துள்ளதாம்.. அது என்ன?
2025ம் ஆண்டில் நவம்பர் மாதம் வரைக்கும் மட்டும் கோவை மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்திருந்தது..

பாம்புகள் நடமாட்டம்
நகரப் பகுதிகளாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும், பாம்பு நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பொதுமக்கள் பாம்பை கண்டால் உடனே தீயணைப்பு துறையையே அழைப்பது வழக்கம்.
தீயணைப்பு வீரர்கள் பாம்புகளை பிடிப்பதற்கான அடிப்படை பயிற்சி பெற்றவர்கள்தான். ஆனால் நாகப்பாம்பு, கட்டுவிரியன் போன்ற விஷப்பாம்புகளை கையாள்வதில் அவர்கள் முழுமையான நிபுணர்கள் கிடையாது என்பதும் உண்மை.
சில சமயங்களில் அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் பாம்புகளுக்கு காயம் ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. இதனால் மனிதர்களுக்கும் பாம்புகளுக்கும் ஒரே நேரத்தில் ஆபத்து உருவாகிறது.
நாகம் செயலி
இதற்கெல்லாம் தீர்வாக, கடந்த ஜூலை மாதம் வனத்துறை 'Naagam' (Networked Alerts and Geographic Aid for Animal Management) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி பாம்பு சம்பந்தமான தகவல்களை பாதுகாப்பாகவும், சரியான நபர்களிடம் கொண்டு செல்லவும் உதவுகிறது.
பொதுமக்கள் பாம்பை கண்டவுடன், இந்த செயலியில் தகவல் அனுப்பினால் போதும். உடனே அருகிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற, முறையாக பயிற்சி பெற்ற பாம்பு பிடி நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் பாம்புகளை எந்த சேதமும் இல்லாமல் பிடித்து, வனப்பகுதி அல்லது மனிதர்கள் இல்லாத பாதுகாப்பான இடங்களில் விடுவிப்பார்கள்.
பாம்புகள் நடமாட்டம்
இந்த செயலியில் பாம்பு நடமாட்டம் தொடர்பான அனைத்து தகவல்களும் இதில் பதிவு செய்யப்படும் .. இந்த தரவுகள் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கும் உதவும்.. மேலும், பாம்பினங்களை அடையாளம் காண உதவும் தகவல்கள், பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள், அரசு அங்கீகாரம் பெற்ற பாம்பு பிடி வீரர்களின் தொடர்பு எண்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இதனால் தேவையற்ற பயம் குறைந்து, மனிதரும் பாம்பும் பாதுகாப்பாக coexist செய்யும் சூழல் உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது..
அதாவது அறிவியல் முறையை பின்பற்றாமல், பாம்புகளை பிடிப்பதை நிறுத்துவது, மனிதர் - பாம்புகள் இடையிலான மோதலை தடுப்பது, இந்த செயலியின் நோக்கம் என்பதால், பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..
அதுமட்டுமல்லாமல் பாம்பு பிடிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கவும், வனத்துறை பயிற்சிகளை நடத்தி வருகிறது.
பாம்பு பிடிப்பவர்களுக்கு பயிற்சி
அந்தவகையில் கடந்த வாரம்கூட, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட பாம்பு பிடிப்பவர்கள் ஒரு நாள் பயிற்சியில் கலந்து கொண்டனர். இதில் கோவையில் இருந்து மட்டும் 70 பேர் 'Naagam' செயலியில் பதிவு செய்யப்பட்டனர்..
இந்நிலையில், கடந்த ஜூலையில் அறிமுகமான நாகம் செயலி, பயன்பாட்டிற்கு வந்த, வெறும் 5 மாதங்களில் முடங்கிவிட்டது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முடங்கிய நாகம் செயலி
சென்னையில் அம்பத்தூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கூறி வருகிறார்கள்.. குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகளை, தற்போது தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பிடித்து வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தபடி உள்ளனர்..
இப்படிப்பட்ட சூழலில்தான், 'நாகம்' (Naagam) என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த செயலியில் பல தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, செயலியில் உள்நுழைய தேவையான ஒருமுறை பதிவிடும் ஓடிபி பெறுவதில் சிரமம் இருப்பதாகவும், பலரது செல்போன் நம்பர்களுக்கு ஓடிபியே வருவதில்லை என்றும், இதனால் செயலியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்..
மக்கள் கோரிக்கை
ஒரு செயலியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தும் முன்பு அதில் உள்ள குறைபாடுகள் மற்றும் தொழில்நுட்ப பிரச்னைகள் குறித்து அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, அவற்றை சரி செய்திருக்க வேண்டும்,
ஆனால், தங்களுக்கு இந்த அவசர ஆபத்து நேரத்தில் செயலி வேலை செய்யாமல் இருப்பது வருத்தமாக இருப்பதாக கவலை தெரிவித்துள்ளதுடன், 'நாகம்' செயலி முழுமையாகவும் சீராகவும் செயல்பட, வனத்துறை அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications