தேடிப் போய் சந்தித்த சீமான்... 97 வயசானாலும் கடைசில நல்லகண்ணு அடிச்சாரு பாருங்க ‘நோஸ் கட் பஞ்ச்’!
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று மூத்த இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார்.
நாம் தமிழர் கட்சியை தொடங்குவதற்கு முன்னர் திராவிடர் இயக்கம், இடதுசாரி மேடைகளில்தான் பேசியவர் சீமான். அப்போது, பெரியாரின் பேரன், மார்க்ஸின் மாணவன் என்றுதான் பேசத் தொடங்குவார் சீமான். அதாவது பெரியாரிஸ்டாகவும் கம்யூனிஸ்டாகவும் தம்மை தொடக்க காலங்களில் அடையாளப்படுத்திக் கொண்டார் சீமான்.

தனி வழியில் சீமான்: 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்த பேரழிவுக்குப் பின்னர் தனி இயக்கம், தனி கட்சி என வேறு ஒரு திசையில் சீமான் பயணித்து வருகிறார். தாம் பேசிய பெரியாரிய, இடதுசாரி சித்தாந்தங்களுக்கு நேர் எதிரான அல்லது மறுக்கிற விஷயங்களை முன்வைத்து தேர்தலில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் சீமான். இதுவரையிலான தேர்தல்களில் ஒரு இடத்தில் கூடசீமானின் நாம் தமிழர் கட்சி வெல்லவில்லை; இருந்த போதும் அனைத்து தொகுதிகளிலும் எப்போதும் போட்டியிட்டு சுமார் 6.7% வாக்குகளைப் பெற்றிருக்கிறது நாம் தமிழர் கட்சி.
சீமான் பிறந்த நாள்: இந்த நிலையில் சீமானின் பிறந்த நாள் சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. சீமானின் பிறந்த நாளுக்கு அண்ணா திமுக, பாமக, பாஜக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைவரக்ள் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் விஜய், தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறியிருந்தார். சீமானுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் யாரும் வாழ்த்து சொல்லவில்லை என்பதும் பேசுபொருளாக இருந்தது.

நல்லகண்ணுவுடன் சீமான் சந்திப்பு: இப்பின்னணியில் சென்னையில் மூத்த இடதுசாரித் தலைவரான நல்லகண்ணுவை இன்று நேரில் சந்தித்தார் சீமான். இந்த சந்திப்பு குறித்து கூறுகையில், பிறந்த நாளன்று வாழ்த்து தெரிவிக்காத நிலையில் நேற்று தொலைபேசியில் அழைத்து பேசினார் நல்லகண்ணு. இதனையடுத்து நானே நேரில் சந்திக்க வருகிறேன் என்றேன். தொடக்க காலங்களில் நல்லகண்ணு அய்யாவை பெரும்பாலும் போராட்டங்களில் சந்தித்திருக்கிறேன். இப்போதும் மரியாதை நிமித்தமாக அய்யா நல்லகண்ணுவை சந்திக்க வந்துள்ளேன் என்றார்.
சீமான் பிரஸ் மீட்: இச்சந்திப்பின் போது சீமான் செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு வழக்கம் போல பதிலளித்துக் கொண்டே வந்தார். சீமானின் செய்தியாளர்கள் சந்திப்பு சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது. சீமான் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தரும் போதும் நல்லகண்ணு மிகவும் அமைதியாக இருந்தார். கோவிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பான கேள்விக்கு திமுக அரசை விமர்சித்தார் சீமான். ராமர் கோவில், பெரியார் சிலை விவகாரங்களில் பாஜகவை விமர்சித்தார் சீமான். கடைசியாக செய்தியாளர் கஞ்சா போதை பொருள் புழக்கம் குறித்து ஒருவர் கேள்வி கேட்ட போது, நான் வெளியே வேறு ஒரு போராட்டத்தில் பங்கேற்க போகிறேன்.. அங்கே இந்த கேள்விகளை கேளுங்க.. நல்லகண்ணு அய்யாவுக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கிறது. அவருக்கு எந்த ஒரு இடையூறும் என்னால் வந்துவிடக் கூடாது என்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பும் நிறைவடைந்தது. சீமானும் நன்றி வணக்கம் என கை கூப்பி வணக்கம் தெரிவித்தார்.

நல்லகண்ணு பஞ்ச் டயலாக்: அப்போதுதான் நல்லகண்ணு அவர்கள் வயது தளர்ந்த நிலையில் தெளிவாக பேச முடியாத நிலையில் ஒரு கருத்தை சொல்ல, 15 நிமிட சீமான் பேட்டியும் பொசுக்கென்றாகிப் போனது. அதாவது "அவர் பேசுனது அவருடைய கருத்து" என்று ஒரு பஞ்ச் டயலாக் போல செய்தியாளர்களிடம் உறுதியாக தெரிவித்தார் நல்லகண்ணு. சில வினாடிகள் அதிர்ந்த சீமான் சமாளித்தபடியே, ஆமாம் அய்யா சொல்றாரு பாருங்க.. அவர் பேசுனது அவரோட கருத்து அப்படி சொல்றாங்க பாருங்க.. அதான்..ஹஹஹா என்றார்.












Click it and Unblock the Notifications