பெரியாரை இழிவுபடுத்துவதா? சீமான் வீடு முற்றுகை- 200-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை பெரியாரை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய, தமிழ்த் தேசிய அமைப்புகளின் 200-க்கும் மேற்பட்டோர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பெரியார் குறித்த சீமான் விமர்சனத்துக்கு ஆதாரங்களை தரக் கோரியும் சீமானுக்கு கண்டனம் தெரிவித்தும் பெரியாரிய அமைப்பினர் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் பெரியாரிய உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

தந்தை பெரியார் குறித்து அண்மைக்காலமாக சீமான் தொடர்ந்து அவதூறாகவும் ஆதாரம் இல்லாமலும் பேசி வருகிறார் என்பது பெரியார் உணர்வாளர்களின் குற்றச்சாட்டு. தந்தை பெரியார் தாய் மொழியை சனியன் என்று கூறினார்; வள்ளலாரை விட பெரியார் என்ன புரட்சி செய்துவிட்டார்; தாய்- மகளுடன் உறவு வைத்துக் கொள்ள சொன்னவர்தான் பெரியார்- அவரா பெண்ணுரிமைக்கு போராடியவர்; அம்பேத்கரும் பெரியாரும் எந்த புள்ளியில் ஒன்றாக இணைகிறார்கள்? என அடுத்தடுத்து சீமான் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

thanthai periyar seeman

சீமானின் இந்தப் பேச்சுக்கு பெரியார் அமைப்பினர் ஆதராங்கள் கேட்ட போது, பெரியார் புத்தகங்களை நாட்டுடையாக்கிமானால் அதில் கிடைக்கும் என மழுப்பலாக பதில் கூறினார். மேலும் சீமானுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் சீமான் பேசி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் சீமான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தந்தை பெரியாரை இழிவுபடுத்துகிற சீமான் வீடு இன்று (ஜனவரி 22) முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் திக, மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. இது தொடர்பான சுவரொட்டிகள் சென்னை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன்பாகவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

இந்த நிலையில் சீமான் வீட்டுக்கு பாதுகாப்பு தரும் வகையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் நேற்று இரவு முதலே அவரது வீடு முன்பாக குவிந்தனர். இதனையடுத்து சீமான் வீட்டை 200-க்கும் மேற்பட்ட பெரியாரிய, தமிழ்த் தேசிய அமைப்பினர் இன்று முற்றுகையிட குவிந்தனர். அப்போது சீமானுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் சீமான் உருவப்படத்தை துடைப்பம் மற்றும் காலணிகளால் அடித்தும் தங்களது எதிர்ப்பை அவர்கள் தெரிவித்தனர். பின்னர் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பெரியாரிய உணர்வாளர்களை போலீசார் கைது செய்தனர்.

thanthai periyar seeman

சீமான் வீடு முற்றுகை ஏன்? -தபெதிக பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன்

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திக பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன், தந்தை பெரியாரைப் பற்றி சீமான் இழிவாகப் பேசியதற்கு ஆதாரம் வேண்டும் என்று 10 நாட்களுக்கு முன்னரே கேட்டிருந்தோம். தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்திருந்தன. ஆனால் சீமான் இதுவரை பெரியாரை இழிவுபடுத்தி பேசியதற்கான எந்த ஆதாரத்தையும் தரவில்லை. அத்துடன் மேலும் மேலும் பெரியாரை இழிவுபடுத்தியும் கொச்சைப்படுத்தியும் பொய்யான பரப்புரைகளை செய்து வருகிறார்.

தந்தை பெரியார் ஆரியத்தையே எதிர்த்தார்; ஆரியத்தால் தந்தை பெரியாரை எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் தற்போது ஆரியத்தின் கருவியாக சீமான் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும் பாஜகவின் எச்.ராஜாவும் நாங்கள்தான் சீமானை இயக்குகிறோம் என்று போட்டி போட்டுக் கொண்டு சொல்லி வருகின்றனர். சீமான் வீடு நோக்கி நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம், தந்தை பெரியாரை நாம் தமிழர் கட்சி இழிவுபடுத்தவில்லை. சீமான் மட்டும்தான் பெரியாரை இழிவுபடுத்தி வருகிறார். சீமான் மட்டுமே பிரசாரமாகவும் செய்து வருகிறார். ஆகையால்தான் அவரது வீட்டை நாங்கள் முற்றுகையிடுகிறோம் என்றார்.

சீமான் வீடு முற்றுகை குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி

சீமான் வீடு முற்றுகை தொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறுகையில், இந்துத்துவ சங்கிகளுக்கு ஆதரவாக பெரியாரை அவதூறு செய்யும் சீமானின் வீடு ஜனவரி 20ம் தேதிக்கு பின்பு முற்றுகையிடப்படும். மேலும் ஆர்.எஸ்.எஸ்சின் நண்பராக மாறியதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சீமானுக்கு சங்கிகளின் தேசிய பானமான 'கோமியம்' அனுப்பி வைக்கப்படும். (அவரது அனுபவத்தில், அவருக்கு பிடித்தமான 'கோமிய Flavor' என ஏதேனும் இருந்தால் சீமான் தெரியப்படுத்தலாம்). தோழமை அமைப்புகள் இணைந்து இவற்றை செவ்வனே செய்து முடிப்பார்கள் என்றார்.

seeman periyar politics

பதிலடி தருவோம்- நாம் தமிழர் கட்சி

இதனிடையே சீமான் வீட்டை முற்றுகையிட வரும் பெரியாரிய உணர்வாளர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் 'விருந்து' வைக்க தயாராக இருக்கிறோம்.. வந்து முற்றுகையிடுங்கள் என பதிலடி தரப் போவதாகவும் எச்சரித்திருந்தனர்.

200-க்கும் மேற்பட போலீஸ் குவிப்பு

மேலும் சீமான் வீடு முற்றுகைப் போராட்டம், நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு ஆகியவற்றால் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன்பாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் அங்கு பதற்றம் நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+