இது எந்த வகையில் நியாயம்?.. சென்னை- திருப்பதி "பிரச்சினையில் குதித்த" நகரி எம்எல்ஏ ரோஜா
சென்னை: சென்னை- திருப்பதி இடையே தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரிடம் சுங்கவரி வசூலிக்கக் கூடாது என நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா புகார் அளித்துள்ளார்.
நடிகை ரோஜா 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சிறிது காலம் நடித்துவிட்டு பின்னர் இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.
இவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். அங்கு ரோஜாவுக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் அவர் அக்கட்சியிலிருந்து விலகி ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸில் இணைந்தார்.

ரோஜாவுக்கு பொறுப்பு
ரோஜாவுக்கு அக்கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அது போல் அவர் 2019 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு நகரி தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் ரோஜா.

ரோஜாவுக்கு அமைச்சர் பதவி
இந்த நிலையில் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. மாறாக அமைச்சர் பதவிக்கு இணையான ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு துறையின் தலைவர் பதவி கிடைத்தது. ஆனால் இரு ஆண்டுகள் கழித்து எம்எல்ஏக்களுக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும் என ஜெகன் மோகன் முடிவு செய்ததால் அவரது பதவி பறிக்கப்பட்டது.

சுங்க வரிக் கட்டணம்
இந்த நிலையில் நகரி தொகுதியில் ரோஜா முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் ரோஜா தற்போது கையில் எடுத்திருக்கும் விஷயம் சுங்க வரி கட்டணம். சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மக்களிடம் இருந்து சுங்க வரி கட்டணம் வசூலிக்கக் கூடாது என ரோஜா புகார் அளித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை
இதுகுறித்து அவர் தனது புகாரில் சென்னை- திருப்பதி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக குண்டும் குழியுமா காட்சியளிக்கிறது. இதனால் இந்த தடத்தில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். ஆனால் சாலையை புதுப்பிக்காமலேயே புத்தூர் அருகே வடமலைப்பேட்டை சுங்கச் சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பிரச்சினைக்கு தீர்வு
இது எந்த வகையில் நியாயம்? இந்த சாலையை புதுப்பித்த பின்னரே அவ்வழியே வரும் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வசூலிக்க வேண்டும் என புகாரில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறையினரிடம் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் சென்னை -திருப்பதி இடையே சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என ஆந்திர போக்குவரத்து கழகம் உறுதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications