ரூ.4 கோடி பணம் வழக்கு.. நயினார் நாகேந்திரனுக்கு எதிராக ஆதாரம்.. நீதிமன்றத்தில் சொன்ன சிபிசிஐடி!
சென்னை: லோக்சபா தேர்தலின் போது ரயில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நயினார் நாகேந்திரனுக்கு எதிரான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் வாதிட்டுள்ளது.
2024 லோக்சபா தேர்தலின் போது நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அந்தப் பணம், பாஜகவின் நயினார் நாகேந்திரன் அவரின் தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாக பேசப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில், சிபிசிஐடி காவல்துறை இயந்திரத்தனமாக இறுதி அறிக்கை தயாரித்துள்ளது. போதுமான ஆதாரங்கள் இல்லாமல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எனக்கு எதிரான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு அளித்த நான் பணம் கொண்டு சென்றேன் என்பதற்கான எந்த சட்டப்பூர்வ ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்யவில்லை. அதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதன்பின் வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 19ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில், ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கூடாது. விசாரணை நீதிமன்றம் வழக்கை கோப்புக்கு எடுத்துள்ள நிலையில், ஐகோர்ட் விசாரிக்க முடியாது. விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை மூலம் மட்டுமே பரிசோதிக்க முடியும்.
புலன் விசாரணையில் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. இதன்பின் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் ஒத்தி வைத்தார். இதனால் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான பிடி இருகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
