அமித் ஷாவை சந்தித்த நயினார் நாகேந்திரன்.. சீட் பங்கீடு பற்றி பேசலையாம்.. அவரே சொன்ன தகவல்!
சென்னை: டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த மீட்டிங்கில் தொகுதிப் பங்கீடு குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை என நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை ஆற்றி வருகின்றன. பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணியை பலப்படுத்த, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என பாஜக தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. எனினும் எடப்பாடி பழனிசாமி அதனை ஏற்கவில்லை.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், கடந்த 11 ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வரும் சூழலில் நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையின் முதல் அத்தியாயம் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
கூட்டணியை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டில், மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள், தேர்தல் வியூகங்கள் ஆகியவை குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
நேற்று முன் தினம் இரவு, நயினார் நாகேந்திரன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினார்.
இந்நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அவரது வீட்டில் சந்தித்து பேசினார்; அப்போது கூட்டணி தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி தெரிவித்த விஷயங்களை, அவரிடம் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, இருவரும் ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொகுதிப் பங்கீடு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், அமித் ஷா உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "மதிப்பிற்குரிய மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை வெளியீட்டிற்காக வந்திருந்தேன். அமித் ஷாவை சந்தித்து பேசுவதற்காக நேரம் கேட்டிருந்தேன். அவருடைய நேரம் கிடைத்ததால் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன்.
தமிழ்நாட்டில் யாத்திரை எப்படி இருக்கிறது? அடுத்து என்ன செய்யப் போகிறேன்? போன்றவற்றைக் கேட்டார். அதற்கான விளக்கத்தை கொடுத்தேன். இந்தச் சந்திப்பில் நாங்கள் தொகுதி பங்கீடு குறித்தோ, கூட்டணி குறித்தோ எதுவும் பேசவில்லை.
ஜனவரி 9 ஆம் தேதி யாத்திரை முடிவதால், நீங்களோ, பிரதமரோ வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர்கள் கண்டிப்பாக வருவதாக கூறியிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார் நயினார் நாகேந்திரன்.












Click it and Unblock the Notifications