எனது சொத்துக்கும் அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! நயினார் நாகேந்திரன் மகன் பளிச்!
சென்னை: தாம் கிரைய ஒப்பந்தம் செய்த சொத்துக்கும் தனது அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மீது அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றஞ்சாட்டி வந்தது. அறப்போர் இயக்கத்தினர் ஆதாரங்களுடன் புகார்கள் எழுப்பியதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய சொத்து பத்திரப்பதிவை இன்று ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் பாலாஜி, தாம் கிரய ஒப்பந்தம் செய்த சொத்தின் மதிப்பு ரூ.100 கோடி அல்ல என்றும் ரூ.46 கோடி தான் எனவும் அவர் கூறியிருக்கிறார். சொத்துப் பதிவை ரத்து செய்திருப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாம் வழக்குத் தொடரவுள்ளதாகவும் கூறினார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு சொத்தை திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பதாக ஒரு தகவல் தனக்கு கிடைத்திருப்பதாகவும் அதன் மீதெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தனது சொத்தை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்று எந்த அதிகாரி பத்திரப்பதிவை கேன்சல் செய்து ஆர்டர் போட்டாரோ அதே அதிகாரி தான் சொத்துப்பதிவின் போது எல்லாம் கரெக்டாக இருப்பதாக கூறியவர் என சாதுர்யமாக ப்ளேட்டை திருப்பிப் போட்டார் நயினார் பாலாஜி. நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் தனது தந்தை நயினார் நாகேந்திரன் போட்டியிடுவாரா மாட்டாரா என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றும் கட்சித் தலைமை தான் இதில் முடிவெடுக்கும் எனக் கூறினார்.
நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜியை பொறுத்தவரை தமிழக பாஜகவில் மாநில இளைஞரணி துணைத் தலைவராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications