என்டிஏ கூட்டணி தொடர்பாக சில முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுப்பார்! நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்த சில முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முன்னதாக 17 லட்சம் பேருக்கு ரூ.1,000 கொடுத்திருந்தால், இந்நேரம் ஒவ்வொரு மகளிரும் ரூ.36 ஆயிரத்தை பெற்றிருப்பார்கள் என்று கூறிய நயினார் நாகேந்திரன், திமுக தங்களின் சுய லாபத்திற்காக எதையும் செய்வார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி இடையில் பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. கூட்டணியில் எந்தக் கட்சிகளை சேர்க்கலாம் என்பதில் அதிமுக தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதேபோல் பாஜக தரப்பில் பாமக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தி இருந்தார். இதையடுத்து நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி புறப்பட்டுள்ளார். டெல்லியில் நடக்க உள்ள பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
இதையடுத்து மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோரையும் சந்தித்து ஆலோசிக்க உள்ளார். இந்த நிலையில் சென்னையில் News 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் திமுக குடும்ப ஆட்சியை நடத்தி வருகிறது. மக்களின் ஆட்சியாக திமுக நடத்தவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை. கஞ்சா பயன்பாடு, பாலியல் வன்கொடுமைகள் போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன.
என்டிஏ கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. அதனால் நிச்சயம் ஆட்சி அமைப்போம். அதேபோல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் திமுக குழப்பமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன் எல்லோருக்கும் மாதம் ஆயிரம் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் ஆயிரம் என்கிறார்கள்.
தற்போது தேர்தலுக்கு முன் சுமார் 17 லட்சம் மகளிருக்கு கூடுதலாக வழங்கி இருக்கிறார்கள். திமுக தங்கள் சுயலாபத்திற்காக எதையும் செய்வார்கள். இந்த உரிமைத் தொகையை முன்னதாகவே வழங்கி இருந்தால், ஒவ்வொரு பெண்ணுக்கு ரூ.36 ஆயிரம் கிடைத்திருக்கும். ஆட்சிக்கு வந்ததில் இருந்து கணக்கிட்டு மொத்தமாக ரூ.55 ஆயிரம் கொடுப்பார்களா என்பதே கேள்வி.
அதேபோல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாஜகதான் தலைமை. தமிழ்நாட்டிற்கு அதிமுக தலைமை. அதன் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதனால் கூட்டணி குறித்த சில முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இணைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications