நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர் கவலைக்கிடம்: இயற்கையோடு போராடும் மூத்த தலைவர்
சென்னை: தமிழக அரசியலில் நேர்மைக்கும் எளிமைக்கும் இலக்கணமாக திகழும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணுவின் உடல்நிலை பின்னடைவை சந்தித்துள்ள செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.. டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
நூறு வயதைக் கடந்த நிலையிலும் மக்கள் பணிகளுக்காக ஓயாமல் உழைத்த இந்த மாபெரும் தலைவர் நல்லகண்ணு.. தற்போது முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்..

நல்லகண்ணு உடல்நிலை
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் மூசசு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.. தொடர் சிகிச்சை நடந்து வரும் நிலையில் நேற்று மாலை திடீரென உடல் பின்னடைவை சந்தித்தது.. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர்..
மருத்துவமனைக்கு நேரில் சென்று நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், செய்தியாளர்களிடம் பேசும்போது மிகுந்த உருக்கமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்..
உடல்நிலை கவலைக்கிடம்
தோழர் நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருவதாகவும், மருத்துவர்கள் தங்களால் இயன்ற அளவு கடுமையாகப் போராடித் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.. இருப்பினும் அவரது உடல்நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பது தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது..
தற்போதைய சூழலில் கட்சியின் தலைமைக்கும் நல்லகண்ணுவின் குடும்பத்தினருக்கும் மருத்துவமனை நிர்வாகம் உடனுக்குடன் தகவல்களை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட வீரபாண்டியன், தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் போராடியவர், தற்போது இயற்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார்..
கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே போன்ற உடல்நலக் குறைவு ஏற்பட்டு நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..
தொடர் பின்னடைவு
வயது முதிர்வு காரணமாக அடிக்கடி உடல்நிலை சரிவில்லாமல் போவதும், பின்னர் அவர் மீண்டு வருவதும் தொடர்கதையாக உள்ளது.. இருந்தாலும் , தற்போதைய பின்னடைவு சற்று தீவிரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது..
சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டது முதல் சமூக நீதி, விவசாயிகளின் உரிமைகள் மற்றும் பொதுநலன் சார்ந்த போராட்டங்கள் எனத் தன் வாழ்நாளில் அவர் காணாத போராட்டங்களே இல்லை.. பல போராட்டங்களில் வெற்றி கண்டு மக்களுக்கு நியாத்தை பெற்றுத் தந்த அந்த உறுதிமிக்கத் தலைவர், இந்த உடல்நலப் போராட்டத்திலும் வெற்றி பெற்று மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது..
எளிமையின் சிகரம்
எளிமையின் சிகரமாகத் திகழும் நல்லகண்ணு , ஒரு நேர்மையான அரசியல்வாதிக்குச் சான்றாக விளங்குபவர்.. கொள்கை பிடிப்புடன் தன் வாழ்க்கையை மக்களுக்காகவே அர்ப்பணித்த அவரின் உடல்நிலை தேற வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் தொடர்ந்து வேண்டி வருகின்றனர்..
போராடுவதையே குணமாகக் கொண்ட நல்லகண்ணு, தற்போதைய இக்கட்டான சூழலையும் வென்று, மீண்டும் மக்கள் பணியாற்றிடத் திரும்புவார் என நம்பிக்கையுடன் அனைவரும் காத்திருக்கின்றனர்..












Click it and Unblock the Notifications